துணை முதல்வர் பதவி.. சமூக நீதி பேசுபவர்கள் இதை செய்யாலாமே.. ஸ்டாலினைக் கேட்கும் வானதி சீனிவாசன்

Apr 6, 2024 - 16:00
துணை முதல்வர் பதவி.. சமூக நீதி பேசுபவர்கள் இதை செய்யாலாமே.. ஸ்டாலினைக் கேட்கும் வானதி சீனிவாசன்

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பட்டியல் சமூகத்தைச் சார்ந்த ஒருவரை கொண்டுவர முடியுமா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிதம்பரம் தொகுதி எம்.பி., திருமாவளவன் மத்திய அரசை குறை கூறுவதற்கும், பிரதமரை வசைபாடுவதற்கும் தான் தனது நேரத்தை பயன்படுத்தியுள்ளார். இந்த தொகுதியின் முன்னேற்றத்திற்கு அவர் எதுவும் செய்யவில்லை. மத்திய அரசின் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 அளிக்கும் திட்டத்தில் சிதம்பரம் தொகுதியில் தான் அதிக விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

மிகப் பெரிய பாரம்பரியம் உள்ள  தொகுதியான சிதம்பரத்திற்கு கோயில்கள் மற்றும் இந்து மதத்திற்கு எதிராக பேசும் திருமாவளவன் எம்.பி.யாக உள்ளார். அவரால் இங்கு ஆன்மீக சுற்றுலாவை வளர்த்து எப்படி வேலைவாய்ப்பை அளிக்க முடியும்? தங்களது சித்தாந்தத்தை பேசும் எம்.பி., இந்த தொகுதிக்கு தேவையில்லை. சிதம்பரம் தொகுதி மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கான எம்.பி. தான் தேவைப்படுகிறார்.

திமுக அரசு செய்யும் சமூக நீதிக்கு எதிரான விஷயங்களை கண்டும் காணாமல் இருப்பது தான் திருமாவளவனின் வேலை. வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காத திமுகவுடன் கூட்டணி வைப்பதுதான் சமூக நீதியா? பட்டியல் இன மக்களுக்காக கட்சி நடத்துவதாக கூறிவிட்டு, தங்களது தனிப்பட்ட நலன்களுக்காக பட்டியல் இன மக்களின் உரிமைகளை அடமானம் வைத்துக் கொண்டிருக்கிறார். 

சமூக நீதி பேசும் முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி அமைச்சரானதும் சட்டசபையில் அவருக்கு முதல் வரிசையில் இடம் கொடுத்துவிட்டு, முதல் வரிசையில் இருந்த சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவனுக்கு பின்வரிசையில் இடம் கொடுத்தார். இதுதான் திமுகவின் சமூக நீதியா? பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவரை ஸ்டாலினால் துணை முதலமைச்சராக்க முடியுமா?" என கேள்வி எழுப்பியுள்ளார் வானதி சீனிவாசன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow