சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியை காப்பி அடித்த திமுக – எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சனம்…
"பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா?"
மாணவர்களுக்கான கல்விக்கடன் ரத்து செய்யப்படும் உள்ளிட்டு, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை மக்களவை தேர்தலுக்கும் திமுக காப்பி அடித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கரூரில் அதிமுக செயல் வீரர், வீராங்கனைகள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும் அதிமுக கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் சின்னசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், மக்களவைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் வாக்குறுதியான நீட் தேர்வு ரத்து, சிலிண்டர் ரூ.500-க்கும், பெட்ரோல் ரூ.75-க்கும், டீசல் ரூ.65-க்கும் வழங்கப்படும் என அறிவித்ததாகக் கூறினார். கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைப்பதாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா? என கேள்வி எழுப்பினார்.
மாணவர்களுக்கு கல்வி கடன் ரத்து என கடந்த தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்தது. தற்போது இந்தியா முழுவதும் மாணவர்களுக்கான கல்வி கடன் ரத்து செய்யப்படும் என சட்டமன்ற தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளையே மக்களவை தேர்தலுக்கும் திமுக காப்பி அடித்து வைத்துள்ளதாக விமர்சனம் செய்தார்.
What's Your Reaction?