பாஜகவின் வெற்றி இந்தியாவின் தோல்வியாக அமையும் -கனிமொழி எம்.பி பேச்சு

திமுகவினரை இந்துக்களுக்கு எதிரானவர்களாக பாஜகவினர் சித்தரிக்கிறார்கள்

Feb 17, 2024 - 10:07
Feb 17, 2024 - 13:03
பாஜகவின் வெற்றி இந்தியாவின் தோல்வியாக அமையும் -கனிமொழி எம்.பி பேச்சு

பாஜக மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்தால் இந்திய நாடு தோற்றுவிடும். பாஜகவின் வெற்றி இந்தியாவின் தோல்வியாக அமையும் என திமுக எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியிருக்கிறார்.

மாநில உரிமையை மீட்டெடுக்கும் பொருட்டு, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் I.N.D.I.A கூட்டணி சார்பில் தேர்தல் பொதுக் கூட்டம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டன.

கூட்டத்தில் கனிமொழி பேசுகையில், பாஜக 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால், இந்திய நாடு தோற்றுவிடும். அவர்களது வெற்றி இந்தியாவின் தோல்வியாக அமையும். I.N.D.I.A  கூட்டணியின் மேற்கு வங்கத்தில் மாற்ற முடியாத சக்தியாக மம்தா பானர்ஜி இருக்கிறார்.கேரளாவில் பாஜக இருக்கிறதா? இல்லையா? என்று கூட தெரியவில்லை. தமிழகத்தில் அவர்கள் பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை. வரக்கூடிய தேர்தலில் I.N.D.I.A கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்றார்.

மேலும்,  மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி தூக்கி எறியப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்படும். மக்கள் நினைத்தால் மாற்ற முடியாதது எதுவுமே இல்லை. திமுக நினைத்தால் மாற்ற முடியாத நிலை இல்லை. தேர்தல் பத்திரங்கள் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் பாஜக ரூ.1294 கோடி தேர்தல் பத்திரம் மூலம் நிதி திரட்டி உள்ளது என பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு குடும்பத்தின் பெண்களையும் குறைந்தது பத்தாவது வரை படிக்க வைத்த ஆட்சி திமுக. திமுகவினரை இந்துக்களுக்கு எதிரானவர்கள் என சித்தரிக்கிறார்கள். எந்த மதத்திற்கும், திமுக எதிரானவர்கள் இல்லை. ஏழை எளிய மக்கள் படிக்கக்கூடாது, உயர்ந்த நிலைக்கு வரக்கூடாது என நினைக்கும் கட்சியினரை இந்துக்களுக்கு எதிரானவர்கள். இட ஒதுக்கீட்டை மறுத்து ஏழை எளிய மக்களை படிக்க விடாமல் தடுக்கும் பாஜகவினரே இந்து மக்களுக்கு எதிரானவர்கள் என்றார்.

மேலும்,  வரும் பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு I.N.D.I.A கூட்டணி வெற்றி பெறும்.அதற்கு வலுசேர்க்கும் விதமாக புதியம்புத்தூர் மக்கள் இருக்க வேண்டும். ஆயத்த ஆடைகளுக்கு சிறப்பு வாய்ந்த ஊராக முன்பு இருந்ததைப்போல புதியம்புத்தூர் சிறப்பான இடத்தை மீண்டும் பெரும் என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow