புதுச்சேரியில் பணத்திற்கு ஆசைப்பட்டு பெண் குழந்தையை கடத்திய 3 பேர் கைது-விசாரணையில் பகீர் தகவல்

3 பேரையும் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Feb 17, 2024 - 09:49
Feb 17, 2024 - 09:58
புதுச்சேரியில் பணத்திற்கு ஆசைப்பட்டு பெண் குழந்தையை கடத்திய 3 பேர் கைது-விசாரணையில் பகீர் தகவல்

புதுச்சேரியில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த நபரின் பெண் குழந்தை கட்டத்தப்பட்ட விவகாரத்தில், பணத்திற்கு ஆசைப்பட்டு கடத்தலில் ஈடுபட்டதாக கைதான மூன்று பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். 

புதுச்சேரி லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் முத்து பாண்டி. இவர் கடற்கரையில் பலூன் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி கடற்கரையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போது, அவரது 4 வயது பெண் குழந்தை திடீரென காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து மூன்று தனிப்படைகள் அமைத்த காவல்துறை, குழந்தையை தீவிரமாக தேடி வந்தது. கடற்கரையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சில இளைஞர்கள் நோட்டமிட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில், புதுச்சேரி வில்லியனூர் கணுவாப்பேட்டையை சேர்ந்த மூர்த்தி என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் பூமியான்பேட்டை அரசு குடியிருப்பு பகுதியை சேர்ந்த அவருடைய நண்பரான ஆகாஷ் என்பவருடன் சேர்ந்து குழந்தையை கடத்தியதை ஒப்புக்கொண்டனர். மேலும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காரைக்காலை சேர்ந்த ஜெகபர் நாச்சியார் என்பவர் குழந்தையை கடத்தி வந்து கொடுத்தால் ரூ.1.50 லட்சம் தருவதாகவும், முன்பணமாக ரூ.10,000 கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து காரைக்காலுக்கு விரைந்த தனிப்படை போலீசார், ஜெகபர் நாச்சியாரை கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். கடத்தல் விவகாரத்தில் அதிரடியாக குழந்தையை மீட்ட தனிப்படை போலீசாரை காவல் கண்காணிப்பாளர் சுவாதி சிங் வெகுவாக பாராட்டினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow