‘சூப்பர் சிங்கர் 10’ நிகழ்ச்சியில் குழந்தைக்குப் பெயர் சூட்டிய பின்னணிப் பாடகர்கள்

எல்லாவற்றுக்கும் மேலாக, தன்னுடைய இசையில் கானா சேட்டுவுக்கு திரைப்படத்தில் பாடும் வாய்ப்பை வழங்குவதாக ஷான் ரோல்டன் அறிவித்துள்ளார்

Feb 15, 2024 - 08:57
Feb 15, 2024 - 09:04
‘சூப்பர் சிங்கர் 10’ நிகழ்ச்சியில் குழந்தைக்குப் பெயர் சூட்டிய பின்னணிப் பாடகர்கள்

‘சூப்பர் சிங்கர் 10’ நிகழ்ச்சியில் குழந்தைக்குப் பெயர் சூட்டிய பின்னணிப் பாடகர்களால் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி, தன்னுடைய புதுமையான அணுகுமுறையால் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. போட்டியாளர்களின் பாடும் திறமையை வெளிக்கொணர்வதோடு மட்டுமன்றி, அவர்களின் மற்ற திறமைகளை வெளிப்படுத்தும் களமாகவும் திகழ்ந்து வருகிறது. அத்துடன், பல்வேறு நெகிழ்ச்சியான சம்பவங்களும் இந்த நிகழ்ச்சியில் அரங்கேறி வருகின்றன. 

இதுவரை ஒளிபரப்பான சீசன்களுக்கு சற்றும் சளைத்தது அல்ல என்று சொல்லும் அளவுக்கு, ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் 10-வது சீசனிலும் பல்வேறு நெகிழ்ச்சியான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் கூட, லின்ஸி டயானா எனும் போட்டியாளர் காதல் திருமணம் செய்துகொண்டதால், அவரைச் சந்திக்காமல் இருந்த தந்தையை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தனர். தந்தை - மகள் மறுபடியும் ஒன்றிணைந்த அந்த நிகழ்வு, அரங்கத்தில் இருந்த அத்தனை பேரையும் அழ வைத்ததோடு, நிகழ்ச்சியைப் பார்த்தவர்களையும் நெகிழச் செய்தது.

அந்த வகையில், அடுத்ததாக கானா சேட்டு எனும் போட்டியாளரின் மகனுக்கு ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியிலேயே பெயர் சூட்டியுள்ளனர்.  

எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர், மணிகண்டன் என்கிற கானா சேட்டு. இவர், இறப்பு நிகழ்ச்சிகளில் கானா பாடியும், ஹோட்டல்களில் சர்வராகவும் வேலை பார்த்து வந்தார். ஆனால், தன் மகன் எந்தக் கஷ்டமும் படக்கூடாது என்பதால், தன்னுடைய திறமையை உலகறியச் செய்வதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகக் கூறினார். இவருடைய கதை, அனைவரையும் உருக வைத்தது. 

கடந்த வாரம் ஒளிபரப்பான ‘பக்திப்பாடல்’ சுற்றில், வித்தியாசமான பாடல் மூலம் அனைவரையும் வியக்க வைத்தார். அவர் பாட்டில் மகிழ்ந்த நடுவர்கள், அவரது குடும்பத்தையே மேடையேற்றி அழகு பார்த்தனர். மேலும், அவருடைய மகனுக்கு ‘தீட்சன்’ எனப் பெயர் சூட்டி, பரிசுப் பொருட்களும் வழங்கினர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தன்னுடைய இசையில் கானா சேட்டுவுக்கு திரைப்படத்தில் பாடும் வாய்ப்பை வழங்குவதாக அறிவித்துள்ளார், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். பொதுவாக, நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்துக்குச் செல்லும் போட்டியாளர்களுக்கே சினிமாவில் பாடும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், நிகழ்ச்சி தொடங்கிய சில வாரங்களிலேயே சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்திருப்பது, மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்குப் போட்டியாளர்களின் திறமையை மெருகேற்றி வருகிறது, ‘சூப்பர் சிங்கர்’.

‘சூப்பர் சிங்கர்’ ஜூனியர் நிகழ்ச்சியிலும் இசையமைப்பாளர் தமன், அதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் சிலருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பினை அளித்தார். திறமைகளை வெளிக்கொணரும் மேடையாக மட்டுமே இல்லாமல், வாய்ப்புகளை வழங்கும் களமாகவும் இந்நிகழ்ச்சி திகழ்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow