டி20 உலகக்கோப்பைக்கு ரோகித் சர்மா தான் கேப்டன்; ஜெய்ஷா அறிவிப்பால் ரசிகர்கள் குஷி
டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்துவார் என ஜெய் ஷா அறிவித்துள்ளார்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு ரோகித் சர்மா தான் கேப்டன் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியிருக்கிறார்.
அமெரிக்கா மற்றும் கரீபியனில் நடைபெற உள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் கலந்து கொள்ள இருக்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா அணிகள் இடம்பெற்றுள்ளன.
டோனியின் ஓய்வுக்கு பிறகு, இந்திய அணி ஐ.சி.சி கோப்பையை வெல்லாதது ரசிகர்களுக்கு ஏக்கமாக உள்ளது. அண்மையில் இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை முன்னேறியும், பட்டத்தை கைப்பற்ற முடியாமல் போனது. இதனால், இந்திய ரசிகர்கள் அடுத்து வரும் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி நிச்சயம் வெல்ல வேண்டுமென எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கிடையே, டி20 கேப்டன் ஹர்திக் பாண்டியாவா அல்லது ரோகித் சர்மாவா என்ற போட்டியும் எழுந்தது.
ஹர்திக் பாண்டியாவை விட ரோகித் சர்மா அணியை சிறப்பாக வழிநடத்த முடியும் என முன்னாள் வீரர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர். இதனால், யார் கேப்டன் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. ஐ.பி.எல் தொடரில் இடம்பெற்றுள்ள மும்பை அணியில் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த முடிவு, இந்திய அணியிலும் பிரதிபலிக்குமா என்று சந்தேகமும் எழுந்தது.
இந்த நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் யார் என்ற கேள்விக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதிலளித்துள்ளார்.
ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஜெய் ஷா, டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்துவார் என்று அறிவித்தார். அவரது தலைமையிலான இந்திய அணி இந்த முறை நிச்சயம் கோப்பையை வெல்லும் என்றும், மூவர்ண கோடி கம்பீரமாக உயர பறக்கும் என்றும் உறுதியாக தெரிவித்தார். இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.
What's Your Reaction?