"அம்மாவும் தங்கச்சியும் இளையராஜா வீட்டு வாசல்ல போய் நின்னாங்க!’’ சத்யன் மகாலிங்கம் பேட்டி
வைரல் பாடகர் சத்யன் மகாலிங்கத்துடன் உரையாடல்..

“அம்மாவும் தங்கச்சியும் இளையராஜா வீட்டு வாசல்ல போய் நின்னாங்க!’’ சத்யன் மகாலிங்கம் பேட்டி
- மானா பாஸ்கரன்
சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் என்பது ஃபேஷனாகிவிட்டது. யார், எது, எதற்கு ட்ரெண்டிங் ஆவார்கள் என்றி சொல்லிவிட முடியாத அளவுக்கு நாளொரு பதிவும் பொழுதொரு வைரலுமாக வலம் வந்துகொண்டிருக்கிறது. 26 ஆண்டுகளுக்கு மேடையில் 20 வயசு பையன் அப்போது பாடிய பாடல் இப்போது கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாகியிருக்கிறது.
அந்தப் பாடகருக்கு இப்போது வயசு 46. அவர் சத்யன் மகாலிங்கம். அப்போது அவர் பாடிய பாடல் ‘ரோஜா… ரோஜா’. அவருடன் ஒரு மழை மாலையில் உரையாடினோம்…
நீங்கள் அப்போது இந்தப்பாடலைப் பாடியபோது என்ன உணர்வு இருந்தது?
‘’வீட்டில் வறுமை. வருமானத்துக்காக மேடைகள்ல பாடிட்டுருந்தேன். அப்போ நான் காலேஜ்ல ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட். எந்தப் பாடலையும் உணர்வுபூர்வமாகத்தான் பாடுவேன். அப்படித்தான் அந்தப் பாடலை 24 வருஷத்துக்கு முன்னால, தீவுத் திடல்ல ஒரு மேடையில பாடினேன். அதற்கு இவ்வளவு வருஷம் கழிச்சு இப்படி ஒரு வரவேற்பும் கைத்தட்டலும் கிடைக்கும்னு அப்போ தெரியாது. பல பாடல்கள் பாடுறோம், அதில் இதுவொரு பாட்டுன்னுதான் அப்போ இருந்தது.’’
24 வருஷத்துக்குப் பிறகு இப்படி ஒரு ட்ரெண்டிங். எப்படி ஃபீல் செய்தீர்கள்?
’’உண்மையை சொல்லட்டுமா? சினிமாவுல… ’ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்’ (கழுகு), ’சில் சில் மழையே’ (அறிந்தும் அறியாமலும்), ’வராக நதிக்கரையோரம்’ (சங்கமம்”, ’அட பாஸு பாஸு’ (பாஸ் என்கிற பாஸ்கரன்), ’குட்டி புலி கூட்டம்’ (துப்பாக்கி) இப்படி பல படங்கள்ல பாட்டு பாடியிருக்கோம். ஆனா, இன்னும் பளீர்னு வெளிச்சத்துக்கு வராமலே இருக்கோமே… இன்னும் இன்னும் நிறைய பாடல்கள் பாட வாய்ப்புகள் கிட்டாம இருக்கோமேங்கிற நினைவுலதான் இருந்தேன். தனி ஆல்பம் போடலாமா? ரீல்ஸ் வெளியிட்டு வெளிச்சம் பெறலாமாங்கிற யோசனையோட இருந்தேன். இப்படித்தான் என் ப்ரொஃபஷன் இருந்து வந்தது. இந்த நிலையிலதான் இந்தப் பாட்டு இப்போ ட்ரெண்டிங் ஆகி, ஒரே நாள்ல வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கு. மிகவும் நெகிழ்வான தருணமா இதை ஃபீல் பண்றேன்.’’
இப்போது இதைக் கேட்டுவிட்டு பிரபலங்கள் பாராட்டினார்களா?
‘’ ‘காதலர் தினம்’ படத்துல ‘ரோஜா ரோஜா பாட்டை பாடின உன்னி கிருஷ்ணன், இந்தப் பாட்டு இடம்பெற்ற ’காதலர் தினம்’ படத்தோட டைரக்டர் கதிர், மியூசிக் டைரக்டர் ஜீ.வி.பிரகஷ் மனந்திறந்து பாராட்டினாங்க. யோகிபாபு போனில் அழைச்சு, என்னன்னமோ சொல்லி ரொம்ப நேரம் பாராட்டுனார். நண்பர்கள் எல்லாம் கொண்டாடித் தீர்த்துவிட்டாங்க. கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும்!’’
நாமும் பாடகர் ஆகணும் என்கிற ஆசை உங்களுக்கு எப்படித் தொடங்கியது, எது உந்துதல்?
‘’எங்க அம்மாதான் தொடக்கப் புள்ளி. அவங்க வீட்டோட வறுமையை நினைச்சு, அதிலேருந்து விடுபடணும்னு அம்மன் கோயில்ல சாமிக்கு முன்னால அவங்களா பாடுவாங்க. எனக்கு பத்து பதினொண்ணு வயசு இருக்கிறப்ப, அவங்க பாடுற அந்தப் பாட்டு என்னமோ செய்யும். அப்பல்லாம் எங்க ஆர்கெஸ்ட்ரா நடந்தாலும் போயிடுவேன். கடைசி வரைக்கும் கேட்பேன். நாமும் பாடலாமேன்னு தனியா பாடிப் பார்ப்பேன். நமக்கு பாடறது நல்ல வருதுன்னு தெரிஞ்சிகிட்டேன். ஒவ்வொரு ஆர்கெஸ்ட்ராவா தேடித் தேடிப் போய் வாய்ப்பு கேட்பேன். நிறைய ஆர்கெஸ்ட்ராவில பாடுறதுக்குன்னு கூட்டிட்டுப் போய் ஸ்பீக்கர்லாம் தூக்க வெச்சிருக்காங்க. முட்டி மோதித்தான் ஸ்டேஜ்ல பாடுறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. முதன்முதலா மெல்கி ராஜா இசைக்குழுவினர்தான் எனக்கு பாட வாய்ப்புக் கொடுத்தாங்க. நான் அங்கே இருந்துதான் சினிமாவுக்கு பாடப் போனேன்.’’
சினிமாவில் நீங்கள் பாடிய முதல் பாடலைப் பற்றி சொல்லுங்களேன்..?
‘’ஆர்கெஸ்ட்ராவில் பாடிக்கிட்டே சினிமாவில் பாட பெரிசா முயற்சி செஞ்சிட்டு இருந்தேன். சுரேஷ்ங்கிற ஒரு நண்பர் மூலமா மியூசிக் டைரக்டர் பரத்வாஜ் சார் அறிமுகம் கிடைச்சது. அவரோட கச்சேரிகள்ல பாடத்தான் என்னை செலக்ட் செஞ்சிருந்தார். அதுக்குப் பிறகு நிறைய ட்ராக் பாடிட்டு இருந்தேன். ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்துல நான் ட்ராக்தான் பாடப்போறேன்ன்னு நினைச்சுட்டிருந்தேன். ‘கலக்கப் போவது யாரு…’ பாடலை என்னையே பாட வெச்சார் பரத்வாஜ் சார். அதுதான் தொடக்கம்… அந்தப் படத்தோட ஸாங்க் ரிலீஸ் ஃபங்க்சன்ல கமல் சார்… அந்தப் பாடலை பாடியது யார்னு கேட்டு, ‘வெரி நைஸ்’னு பாராட்டினார். அதுவொரு கலர்ஃபுல் ஜர்னி…’’
இளையராஜா இசையிலும் பாடியிருக்கீங்களே…
‘’ஆமாம் ’தோணி’ தெலுங்குப் படத்துலயும், ‘தாரை தப்பட்டை’ படத்திலேயும் ராஜா சார் இசையில பாடியிருக்கேன். சார் நிறைய சொல்லிக் கொடுப்பார். நிறைய கற்றிருக்கேன். அவர் மியூசிக்ல பாடினது என் வரம். நான் மேடைகள்ல பாடிக்கிட்டிருந்தப்ப… எனக்கு சான்ஸ் கேட்டு என் அம்மாவும் என் தங்கச்சியும் ராஜா சார் வீட்டு வாசல்ல நிறைய நாள் நின்னுட்டு இருந்திருக்காங்க… அதெல்லாம் மறக்க முடியாதது.’’
இடையில் ரெஸ்ட்ராரெண்ட் தொழிலுக்கு போயிட்டீங்களே…
‘’ஆமாம்… இத்தனை பாடல்கள் பாடியிருந்தும் பெரிசா சினிமா பாடல்கள்ல வெளிச்சத்துக்கு வர முடியலையேங்கிற ஏதோ ஒரு கவலை இருந்திட்டே இருந்தது. இப்படியான நிலைமையில கொரோனா வந்து எந்த வாய்ப்பும் இல்லை. அதன் பிறகு, என்ன செய்யலாம்னு யோசிச்சு ரெஸ்ட்ராரெண்ட் ஆரம்பிச்சேன். ’தெரியாத தொழிலை செய்யாதே தெரிஞ்சதை விட்டுடாதே’ங்கிறதை அப்போதான் தெரிஞ்சுகிட்டேன். அந்த தொழில் சரியா போகலை… அப்புறம் வெளி நாட்டுல ரெஸ்ட்ராரெண்ட்டில் வேலை பார்த்தேன். அதுவும் ஒர்கவுட் ஆகலை… மறுபடியும் சினிமாவில் பாடறதுதான் நம்ம ப்ரொஃபஷன் என்பதை உணர்ந்து திரும்ப வந்துட்டேன்.’’
சத்யன் மகாலிங்கத்தின் இன்றைய வைரல் ரசிகர்களின் கண்ணோடும் காதுகளோடு மட்டும் அலையடித்து ஓய்ந்துவிடாமல் ஹோலிவுட்டின் கதவுகளையும் திறக்க குமுதம் வாழ்த்துகிறது.
What's Your Reaction?






