கண்ணை பாதிக்குமா கம்ப்யூட்டர்?

கணினிப் பார்வைக் கோளாறு குறித்த விரிவான கட்டுரை..

கண்ணை பாதிக்குமா கம்ப்யூட்டர்?

கண்ணை பாதிக்குமா கம்ப்யூட்டர்?

- டாக்டர் கு. கணேசன்

இது டிஜிட்டல் யுகம்; கம்ப்யூட்டர் காலம். பலசரக்கு பில்லில் இருந்து விமான டிக்கெட் வரை  கம்ப்யூட்டர் இல்லாமல் வாங்க முடியாது. தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சி அடைய அடைய, , பலரது வீட்டிலும் கம்ப்யூட்டர் வந்து உட்கார்ந்துகொண்டுவிட்டது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு கம்ப்யூட்டர் பயன்பாடு ரொம்பவும் அதிகரித்துவிட்டது. பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களுக்கு மடிக்கணினியை இலவசமாக வழங்கியுள்ளன. அலுவலகக் கூட்டங்களும் உரையாடல்களும்  கம்ப்யூட்டரில்தான். கம்ப்யூட்டரிலிருந்து பார்வையை எடுக்க முடியாத அளவுக்கு நிமிடத்துக்கு நிமிடம் குறுஞ்செய்திகளும் மின்னஞ்சல்களும் வந்துகொண்டே இருக்கின்றன.

இப்படி, நீண்ட நேரம் ஒளி தரும் திரைகளைப் பார்ப்பதால் கண்களுக்கு அழுத்தம் ஏற்படும். அந்த அழுத்தம் நம் பார்வைத் திறனைப் பாதிப்பதுடன் பார்வைக் கோளாறையும் ஏற்படுத்துகிறது.

திறன்பேசி / டேப்லட் வருகைக்குப் பிறகு நாளொன்றுக்கு ஒருவர் 2லிருந்து 4 மணி நேரம் வரை அதைப் பயன்படுத்துகிறார். இதன்படி நவீன வாழ்வியல் வருடத்துக்கு 700 - 1400 மணி நேரத்தை நம்மிடமிருந்து பறித்துக்கொள்கிறது. அதுமட்டும்மல்ல, நம் பார்வையையும் பறித்துக்கொள்கிறது.

சிவிஎஸ்’ (CVS)  என்றால் என்ன தெரியுமா?

20ம் நூற்றாண்டில் பிரபலமான ஒரு மருத்துவப் பதம் ‘சிவிஎஸ்’. Cardio Vascular System – (CVS). அதாவது, இதய ரத்த நாள மண்டலம். இந்த நூற்றாண்டில் பிரபலமாகி வரும் பதமும் ‘சிவிஎஸ்’தான். Computer Vision Syndrome – (CVS). அதாவது, கணினிப் பார்வைக் கோளாறு. 

கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்களில் 66% பேருக்கு இந்தப் பாதிப்பு இருக்கிறது. இது குழந்தைகளையும் பாதிக்கிறது என்பதுதான் அதிக கவலைக்குரியது. உண்மையில் நம் அலட்சியம் ஏற்படுத்தும் விளைவுகளில ஒன்றுதான் இந்தக் கணினிப் பார்வைக் கோளாறு.

அறிகுறிகள்

கண் வறட்சி அடைவது, பார்வை குறைதல், அடிக்கடி தலைவலி வருவது, கழுத்திலும் தோள்பட்டையிலும் அசௌகரியம் ஏற்படுவது, கண்ணில் மணல் விழுந்தது போன்று உறுத்தல் உண்டாவது அல்லது ஓர் அழுத்தம் தெரிவது, கண் சிவப்பது, கண் சோர்வடைவது… என ஏதாவது அறிகுறி தெரிந்தால் உடனடியாக கண் நல மருத்துவரைப் பாருங்கள்.

ஆரம்பத்திலேயே இதைக் கவனித்துவிட்டால், பிரச்னை பெரிதாகாது. தவறினால், கண்களுக்குக் கண்ணாடி அணிவது கட்டாயமாகும். அது மட்டுமல்லாமல், பணியிடங்களில் வேலைத் திறனையும் பாதிக்கும். உறக்கமும் கெடும்.

தடுப்பது எப்படி

கணினித் திரையைப் பார்க்கும் நேரத்தைக் கட்டுப்படுத்துங்கள். தொடர்ந்து அரை மணி நேரத்துக்கு மேல் திரையைப் பார்க்காதீர்கள். கண்களைத் திருப்பி சில நொடிகளுக்கு அருகில் உள்ள பொருள்களைப் பாருங்கள்.

கணினி மேஜையும், நாற்காலியும் வசதிக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் வகையில் இருப்பது நல்லது. முதுகு மற்றும் கழுத்தின் பாரத்தைத் தாங்கும் வகையில் இருக்கையில் குஷன் இருந்தால் இன்னும் சிறப்பு. நிமிர்ந்து உட்காருவதும், கால்களை செங்குத்தாகத் தொங்கப்போட்டு, தரையில் பாதங்களைப் பதித்துக்கொள்வதும் முக்கியம்.

அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து கைக்கு எட்டும் தூரத்தில் மானிட்டர் இருக்க வேண்டும். கணினித் திரையின் மேல்மட்டம் பார்வை மட்டத்துடன் ஒத்துப்போக வேண்டும். மவுஸை இயக்கும் கைகளுக்கு இருக்கையிலோ, மேஜையிலோ சப்போர்ட் இருக்க வேண்டும். விசைப்பலகை மேஜையின் நுனியிலிருந்து அரை அடி உள்தள்ளி இருக்க வேண்டும். படுத்த நிலையில் அல்லது பாதி சாய்ந்த நிலையில் உள்ள திரைச் சாதனங்களைப் பார்க்க வேண்டாம்.

கணினியில் வேலை செய்யும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கண் பார்வையைக் கணினியிலிருந்து விலக்கி, 20 அடி தொலைவில் இருக்கும் ஒரு பொருளை 20 நொடிகளுக்குப் பார்க்க வேண்டும். மணிக்கொரு முறை 5 நிமிடம் எழுந்து நிற்கலாம்; நடக்கலாம்; கை, விரல்களை நீட்டி மடக்கலாம். இப்படிக் கழுத்துக்கு ஓய்வு தருவது முக்கியம்.

நாம் சாதாரணமாக நிமிடத்துக்கு 20 முறை கண் சிமிட்டுகிறோம். ஆனால், கணினியைப் பயன்படுத்தும்போது அல்லது தொலைக்காட்சி/ திறன்பேசியைப் பார்க்கும்போது நிமிடத்துக்கு 7 முறை எனக் குறைகிறது. ஆகவே, அடிக்கடி கண்களைச் சிமிட்டுங்கள். இது கண்களை ஈரப்படுத்தும்; கண் வறட்சியைத் தடுக்கும்.

சரியான வெளிச்சம் கிடைக்கும்படி விளக்குகள் இருப்பதையும் இருட்டில் வேலை செய்யாமல் இருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். கண்கள் கூசும் அளவுக்குத் திரையில் அதிக வெளிச்சம் இருந்தால், ஃபில்டர்களைப் பயன்படுத்தலாம்.



டாக்டர் கு. கணேசன்

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow