Coolie: ரஜினியின் கூலி ஷூட்டிங் கேன்சல்... முடிவை மாற்றிய லோகேஷ் கனகராஜ்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் 171வது படமான கூலியை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து லால் சலாம், வேட்டையன் படங்களுக்காக கால்ஷீட் கொடுத்திருந்தார். இவைகளில் லால் சலாம் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸானது. அடுத்து தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி ஹீரோவாக நடித்துள்ள வேட்டையன், அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்னர் வேட்டையன் படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து துபாய், அபுதாபி நாடுகளுக்கு டூர் சென்றுவிட்டு திரும்பிய ரஜினி, அதன்பின்னர் இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்றார். அப்போது கூலி படத்தின் ஷூட்டிங் ஜூன் 10ம் தேதி தொடங்கும் என ரஜினியே அப்டேட் கொடுத்திருந்தார். இதனால் இந்தப் படம் குறித்து ஜூன் 10ம் தேதியான இன்று தரமான அப்டேட்ஸ் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். மேலும், முதற்கட்ட படப்பிடிப்பில் ரஜினியுடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் இருவரும் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. ஆனால் சொன்னபடி இன்று கூலி படப்பிடிப்பு தொடங்கவில்லை என சொல்லப்படுகிறது.
பிரதமராக மோடி பதவியேற்ற நிகழ்ச்சி நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில் ரஜினி தனது மனைவி லதாவுடன் பங்கேற்றிருந்தார். அதன் தொடர்ச்சியாக இன்று கூலி படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூலி படப்பிடிப்பை இந்த மாதம் இறுதிக்கு மாற்றிவிட்டாராம் லோகேஷ் கனகராஜ். அல்லது அடுத்த மாதம் ஆரம்பத்தில் தொடங்கலாம் எனவும் கூறப்படுகிறது. எப்போதுமே சொன்ன தேதியில் படப்பிடிப்பை தொடங்குவதே லோகேஷின் வழக்கம். அதேபோல், டைட்டில் டீசர் வெளியாகும் போதே, படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துவிடுவார்.
ஆனால், கூலி டைட்டில் டீசர் வெளியான போது, அதில் படத்தின் ரிலீஸ் தேதியை லோகேஷ் கனகராஜ் அறிவிக்கவில்லை. அதேபோல், படப்பிடிப்பு எப்போது என்பது குறித்தும் குறிப்பிடவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், கூலி தரமான ஃபேன்பாய் சம்பவமாக வந்தாலே போதும் என காத்திருந்தனர். இந்நிலையில், இப்போது கூலி ஷூட்டிங் சொன்ன தேதியில் தொடங்காததும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரம் கூலி படத்தை அடுத்தாண்டு சம்மரில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம். தொடங்கிய வேகத்தில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட லோகேஷ் & டீம் பக்காவாக பிளான் செய்துள்ளதாம்.
கூலி படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் ஷூட்டிங், சென்னை, ஐதராபாத் பகுதிகளில் நடைபெறவுள்ளது. அதன்பின்னர் பெரும்பாலான காட்சிகளை ஷெட் போட்டு அதில் எடுக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூலியை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் உடன் இணையவுள்ள ரஜினி, மேலும் 2 தயாரிப்பு நிறுவனங்களுக்கும் கால்ஷீட் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
What's Your Reaction?