Vijay: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத் தொகை... தவெக தலைவர் விஜய் அதிரடி!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊக்கத் தொகை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை: கோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் விஜய், தற்போது தி கோட் படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளார் விஜய். அதன் பின்னர் முழுநேர அரசியலில் களமிறங்கவுள்ளதாக விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருந்த விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியையும் தொடங்கினார். இன்னொரு பக்கம் விஜய்யின் தவெக கட்சியினரும், மக்கள் இயக்க நிர்வாகிகளும் தொடர்ந்து மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கடந்தாண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகையும் பரிசும் வழங்கினார் விஜய். அதாவது 234 தொகுதி வாரியாக 10ம் வகுப்பு, 12ம் வகுப்புகளில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார். சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அதேபோல், இந்தாண்டும் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய், 2024ம் ஆண்டு நடந்து முடிந்த 12ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவ, மாணவிகளைத் தமிழக வெற்றிக் கழகம் சார்பாகப் பாராட்டவுள்ளார். முதற்கட்டமாக 28.06.24 வெள்ளிக் கிழமை அன்று, சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கான்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது. இதில், அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப்பட உள்ளனர்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, “இரண்டாம் கட்டமாக 03.07.24 புதன் கிழமை அன்று செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாரட்டப்பட உள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தளபதி விஜய், மாணவர்கள் அனைவருக்கும் அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில், சான்றிதழ்களும் ஊக்கத் தொகையும் வழங்கி கெளரவிக்க உள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் 22ம் தேதி விஜய் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அதன் தொடர்ச்சியாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்தப்படவிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக காணப்படுகிறது. சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் களமிறங்கவுள்ள விஜய், தேர்தலுக்கு முன்பே பொதுமக்கள் மத்தியில் கவனம் ஈர்க்கும் வேலைகளில் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?