Coolie: நண்பேன்டா! கூலி படத்தில் ரஜினியுடன் இணையும் சத்யராஜ்... அடிதூள் அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி படத்தில் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

May 27, 2024 - 12:49
Coolie: நண்பேன்டா! கூலி படத்தில் ரஜினியுடன் இணையும் சத்யராஜ்... அடிதூள் அப்டேட்!

சென்னை: வேட்டையன் படத்தை முடித்துவிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினி, அடுத்து லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இணையவுள்ளார். ரஜினி – லோகேஷ் காம்போவில் உருவாகும் இந்தப் படத்துக்கு கூலி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு கூலி டைட்டில் டீசரும் வெளியாகி ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுத்திருந்தது. கூலி படத்தில் ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கவுள்ளனர் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. ஆனால், ரஜினியுடன் சத்யராஜ் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், வில்லன், ஹீரோ என மாஸ் காட்டிய சத்யராஜ், தற்போது வெரைட்டியான கேரக்டர்களில் நடித்து வருகிறார். ஆரம்ப காலங்களில் ரஜினியுடன் பாயும் புலி, மூன்று முகம், தம்பிக்கு எந்த ஊரு, நான் சிகப்பு மனிதன், ராகவேந்திரா, மிஸ்டர் பாரத் ஆகிய படங்களில் நடித்துள்ளார் சத்யராஜ். ஒருகட்டத்தில் அவர் ரஜினியுடன் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து வந்தார். கடைசியாக ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில் ரஜினிக்கு வில்லனாக சத்யராஜ்ஜை நடிக்கை வைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால், சத்யராஜ் இந்த ஆஃபருக்கு நோ சொன்னதோடு, என் படத்தில் ரஜினி வில்லனாக நடிக்க ஓக்கே சொல்வாரா என்பதாக கேள்வியும் எழுப்பினார்.

இதனால் ரஜினி – சத்யராஜ் இடையே பிரச்சினை இருப்பதாகவும், இனி அவர்கள் சேர்ந்து நடிக்க வாய்ப்பில்லை எனவும் கோலிவுட்டில் இருந்து செய்திகள் வெளியாகின. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் ரஜினியுடன் நடிப்பதை உறுதி செய்துள்ளார் சத்யராஜ். இதுபற்றி ஏற்கனவே செய்திகள் வெளியாகினாலும், ரஜினிக்கு வில்லனாக சத்யராஜ் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், கூலி படத்தில் ரஜினியும் சத்யராஜ்ஜும் நெருங்கிய நண்பர்களாக நடிக்கவுள்ளது தான் லேட்டஸ்ட் அப்டேட் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த அப்டேட் வெளியானது முதல் ரஜினி ரசிகர்களிடம் கூலி படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. என்னதான் ஹீரோயிசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், தனது படங்களில் மல்டி ஸ்டார்ஸ் சம்பவம் செய்வதில் கில்லாடி லோகேஷ். அதேபோல், கூலி படத்திலும் ரஜினியுடன் முன்னணி நடிகர்கள் உட்பட சத்யராஜ் போன்ற 90ஸ் ஹீரோக்களையும் களமிறக்கவுள்ளாராம். மேலும், படம் முழுவதும் ரஜினி - சத்யராஜ் காம்போ சம்பவம் செய்யும் எனவும், ஆக்ஷன் மட்டுமில்லாமல் டார்க் காமெடி போர்ஷனும் தூக்கலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. 

கூலி படத்தில் ரஜினியுடன் சத்யராஜ் நடிக்கவுள்ளது பற்றி சீக்கிரமே அபிஸியல் அப்டேட் வெளியாகவுள்ளதாம். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் சிக்கந்தர் படத்தில் சத்யராஜ் தான் வில்லன் ரோலுக்கு கமிட்டாகியுள்ளாராம். பாகுபலி கட்டப்பா கேரக்டருக்குப் பின்னர் கூலி, சிக்கந்தர் படங்கள் சத்யராஜ்ஜுக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.     

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow