ஏசி பஸ்ஸா? டீலக்ஸ் பஸ்ஸா?.. ஒரே குழப்பம்.. போக்குவரத்து துறைக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

Apr 26, 2024 - 15:44
ஏசி பஸ்ஸா? டீலக்ஸ் பஸ்ஸா?.. ஒரே குழப்பம்.. போக்குவரத்து துறைக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

அரசு பேருந்துகளில், பேருந்துகளின் வகையை குறிப்பிட்டு இயக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் போக்குவரத்து துறை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மணச்சநல்லூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.  அதில், "தமிழ்நாட்டில் பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் பேருந்துகள் Non Deluxe, Semi Deluxe, Deluxe, A.C Deluxe என வகைப்படுத்தப்படுகின்றன. 

இருக்கை, காற்றோட்டம், குளிர்சாதனம் உள்ளிட்ட வசதிகளின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால், தற்போது பேருந்துகளின் வகையை குறிப்பிடாமல் 1 to 1, 1 to 3, 1 to 5 என்பது போல பேருந்துகளில் தகவல் பலகை வைக்கப்படுகிறது. இது ஏற்கத்தக்கது அல்ல. 

எனவே பேருந்துகளில் 1 to 1, 1 to 3, 1 to 5 என்று இல்லாமல் பேருந்துகளின் வகையை குறிப்பிட்டு இயக்கப்படுவதை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் அமர்வில் இன்று (ஏப்ரல் 26) விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையர், நிர்வாக இயக்குநர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow