ராகுல் ஆண்டாலென்ன.. மோடி ஆண்டாலென்ன தமிழ்நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும்.. சொல்கிறார் செல்லூர் ராஜூ 

தமிழகத்திற்கு யார் நல்லது செய்தாலும் வரவேற்போம் என்று செல்லூர் ராஜூ கூறியுள்ளார். தமிழகம் மற்றும் இந்தியாவில் போதைப்பொருள் கடத்தல் தலைவிரித்தாடுவதால் அரபு நாடுகளை போன்று தண்டனை விதிக்க வேண்டும் என்று செல்லூர் ராஜூ கூறியுள்ளார். 

Apr 26, 2024 - 15:34
ராகுல் ஆண்டாலென்ன.. மோடி ஆண்டாலென்ன தமிழ்நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும்.. சொல்கிறார் செல்லூர் ராஜூ 

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நீர், மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  52 ஆண்டுகளாக மக்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைக்கும் கட்சி அதிமுக என்று கூறினார். 

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் பலரின் பெயர் பட்டியலில் இருந்து உண்மையிலேயே விடுபட்டுள்ளது. இதை தேர்தல் ஆணையத்தின் மெத்தனப்போக்கு என்று சொல்வதா.? என்ன சொல்வது எனத்தெரியவில்லை. மதுரையில் தான் இப்படி இருக்கிறது என பார்த்தால் எல்லா மாவட்டங்களிலும் அப்படித்தான் உள்ளது.

ஒவ்வொரு அரசியல் இயக்கங்களும் தேர்தல் காலத்தில் தங்கள் கட்சியினர் மூலம் பூத் சிலிப் வழங்க தேர்தல் ஆணையம் தடை செய்தது. கட்சியினர் பூத் சிலிப் வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு செல்லூர் ராஜூ வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்திற்கு யார் நல்லது செய்தாலும் வரவேற்போம். அது ராகுலா இருந்தாலும் சரி.! மோடியா இருந்தாலும் சரி.! ஆனால் தமிழகத்தில் பாதகமானதை செய்தால் நிச்சயம் எதிர்ப்போம். அதை எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக சொல்லி உள்ளார். திமுக எம்.பிக்களை போல அதிமுக எம்பிக்கள் இருக்க மாட்டார்கள் என்று கூறினார். 

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. ஒரு மதத்தை குறி வைத்து பேசுவது உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் மோடி பேசுவது சரியல்ல. அதை அதிமுக பொதுச்செயலாளரும் கூறி உள்ளார்.

தமிழகத்தில், இந்தியாவில் தலைவிரித்தாடும் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. நாளைய நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள், விடிவெள்ளிகள் போதைப்பொருள் பயன்பாட்டால் சீரழிவது மன வேதனையடைய செய்கிறது.

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டாஸ் போடுவது மட்டுமல்லாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும், புதிய சட்டங்களை கொண்டு வர வேண்டும். போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் அரபு நாடுகளை போல தண்டனை வழங்க வேண்டும் என்றும் செல்லூர் ராஜூ கோரிக்கை விடுத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow