தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு -ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு குறித்து திருநாவுக்கரசு உருக்கம்

காங்கிரஸ் கட்சியின் நலன் காக்க தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.அனைவரிடமும் அன்பாகவும், எளிமையாக பழகக் கூடியவர்

Dec 14, 2024 - 12:25
தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு -ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு குறித்து திருநாவுக்கரசு உருக்கம்

இளங்கோவன் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் சென்னை ராமாபுரத்தில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான திருநாவுக்கரசு நேரில் அஞ்சலி செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களை திருநாவுக்கரசு, “ தந்தை பெரியாரின் பேரனும், திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடி தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ்  சம்பத் அவர்களுடைய மகனும் என் அருமை நண்பர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்தி உள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக தெரியும்.

எங்கள் இருவருக்கும் நெருக்கமான நட்பு இருந்தது. தனது அறிவால் உயர்ந்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகவும் காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டவர். அவருடன் மணிக்கணக்கில் பேசும் வாய்ப்பு நாள்கணக்கில் பயணிக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.17 ஆண்டுகளாக அவருடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு உள்ளேன். ஓய்வு அறியாமல் காங்கிரஸ் கட்சி நலனுக்காக செயல்பட்டவர். ஏராளமான நிர்வாகிகளை தொண்டர்களை ஆதரவுகளாக காங்கிரஸ் கட்சிக்கு கொண்டு வந்தவர். காங்கிரஸ் கட்சியின் கம்பீரமான பிரம்மாண்டமான குரலாக ஒலித்தவர்.

காங்கிரஸ் கட்சியின் நலன் காக்க தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.அனைவரிடமும் அன்பாகவும், எளிமையாக பழகக் கூடியவர்.பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் மதிப்புக்கு உரியவராக திகழ்ந்தவர். இளங்கோவன் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத பேர் இழப்பாகும்.தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பாகும். அவரை இழுந்து வாடும் மகன் மற்றும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow