அமைச்சர் மனோ தங்கராஜுக்கு எதிராக அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ் 

அமைச்சரின் கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்

Dec 9, 2023 - 11:42
Dec 9, 2023 - 16:10
அமைச்சர் மனோ தங்கராஜுக்கு எதிராக அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ் 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை "வடநாட்டு கைகூலி" என விமர்சனம் செய்த தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ், எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் அனுப்பியுள்ள நோட்டீசில், கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஆங்கில நாளிதழில் ஆவின் நிறுவனம் பாலில் கொழுப்புச்சத்துக்களை குறைத்து, விலையை குறைக்காமல் விற்பனை செய்து வருவதாக செய்தி வெளியிட்டது.  

அதனடிப்படையில், ஆவின் நிறுவனம் தவறை சரி செய்யாவிட்டால் தனியார் நிறுவனங்கள் தான் பயன்பெறும் என்றும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று X தளத்தில் அண்ணாமலை கருத்து தெரிவித்தார். அவரது கருத்துக்கு துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பதிலளிக்காமல் தன்னை வடநாட்டு கைகூலி என அவதூறாக விமர்சனம் செய்துள்ளார். 

கடந்த நவம்பர் மாதம் தனியார் ஆய்வக அறிக்கையில், ஆரஞ்சு நிர பால் பாக்கெட்டில் குறிப்பிட்டுள்ளபடி 6 சதவிகித கொழுப்பு இல்லை என அண்ணாமலை குற்றம் சாட்டினார். அதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் மனோ தங்கராஜ், மீண்டும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

அவரது கருத்து தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளதால், இனிமேல் அவதூறான கருத்துக்களை கூற கூடாது எனவும், மான நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாயை ஆவின் வைப்பு நிதிக்கு வழங்க வேண்டும் என்றும், அமைச்சரின் கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அண்ணாமலை தரப்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

15 நாட்களில் மன்னிப்பு கோரவும், மான நஷ்ட ஈடு வழங்கவும் தவறும் பட்சத்தில் சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என அண்ணாமலை தரப்பில் அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow