துப்பாக்கியுடன் கைதான ஊராட்சி மன்ற தலைவருக்கு டிச.22 வரை காவல்
நீதிபதி கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு வந்ததை ஒட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மணஞ்சேரி கிராமத்தில் நேற்று இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகனுக்கு எதிர்வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி மருத்துவமனைக்கு நேரில் சென்று உத்தரவிட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளப்புலியூரில் தென்றல் என்பவனிடம் கைதுப்பாக்கி இருப்பதாக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து தென்றலிடமிருந்து கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.அதனைத்தொடர்ந்து தென்றல் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.
அவனிடம் நடத்திய விசாரணையில், மேலும் துப்பாக்கிகள் மணஞ்சேரியில் இருப்பதாக தகவல் கிடைக்கவே,நேற்று காலை மணஞ்சேரி கிராமத்தில் திருவிடைமருதூர் காவல் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.அப்போது ஈஸ்வரன்,மணிகண்டன், ரஞ்சித் குமார் ஆகிய மூவரிடம் விசாரணை மேற்கொண்டதில் ஈஸ்வரன் அதே பகுதியில் புதைத்து வைத்திருந்த இரண்டு துப்பாக்கிகளை காவல்துறையினர் கைப்பற்றினர்.
சில தினங்களுக்கு முன்பு பிடிபட்ட தென்றல், நேற்று கைது செய்யப்பட்ட ஈஸ்வரன், மணிகண்டன் ,ரஞ்சித் குமார், ஆகியோர் கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகனிடம் வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது.இதனைத்தொடர்ந்து முருகனையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
முருகன் உடல்நலம் பாதிக்கப்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று மருத்துவமனைக்கு நேரில் வந்த திருவிடைமருதூர் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சிவபழனி எதிர்வரும் 22ஆம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் . நீதிபதி கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு வந்ததை ஒட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
What's Your Reaction?