காஞ்சிபுரம்: மழைநீர் களத்தில் இறங்கி நடவடிக்கை எடுத்த அமைச்சர்

ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை உடனடியாக காலி செய்ய முடியாது என்பதால் அவர்களுக்கு உரிய இடமளித்து நீர்நிலைகள் காக்கப்படும்

Dec 9, 2023 - 11:57
Dec 9, 2023 - 16:11
காஞ்சிபுரம்:  மழைநீர் களத்தில் இறங்கி நடவடிக்கை எடுத்த அமைச்சர்

மிக்ஜாம் புயலால் காஞ்சிபுரம் மாநகராட்சியில் தாழ்வான பகுதியில் உள்ள பள்ளிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற  அமைச்சர் முத்துசாமி நடவடிக்கை மேற்கொண்டார்.மேலும் ஆக்கிரமிப்புகளில் குடியிருப்பவர்களுக்கு உரிய இடமளித்து நீர்நிலைகள் காக்கப்படும்  எனவும் உறுதி அளித்தார்.

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் அதனை அகற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்ககு வெள்ள மீட்பு பணிகளுக்காக அமைச்சர் முத்துசாமி பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். 

மிக்ஜாம் புயலால் பெய்த கன மழையினால் காஞ்சிபுரம் மாநகராட்சியில் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள பி.எஸ்.சீனவாசா பள்ளி வளாகத்தில் மழைநீரானது குளம் போல் தேங்கியுள்ளது.அதனைத்தொடர்ந்து வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு மழைநீரை அகற்றுவதற்கான பணியில் ஈடுபட்டனர்.இதனை மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள், அதன் வடிகால் மற்றும் மழைநீர் வெளியேற்றுவதற்கான வழிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

 பின்னர்,பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி உடனடியாக தேங்கியுள்ள நீரை அகற்றவும்,நோய் தடுப்பு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார். லாரிகள் மூலம் மணல் கொண்டு வரப்பட்டு மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மணல் கொட்டி ஜேசிபி இயந்திரங்கள் கொண்டும் சரி செய்யப்பட்டு வரும் பணிகளையும், மோட்டார் இயந்திரங்கள் கொண்டு நீரை வெளியேற்றும் பணியினையும் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, “காஞ்சிபுரம் மாநகராட்சி பொருத்தவரை இந்த மழையில் பெருமளவு நீர் தேங்காத நிலை ஏற்பட்டது.மேலும் மஞ்சள் நீர் கால்வாய் ரூபாய் நாற்பது கோடியில் புனரமைக்க உள்ளதால் வருங்காலங்களில் மாநகரில் மழைநீர் அனைத்தும் உடனடியாக வெளியேறும் நிலை உருவாகும்.தற்போது தற்காலிகமாக நீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.இதனால் பள்ளி மாணவர்கள் எந்த ஒரு சிரமத்திற்கு உள்ளாகவில்லை.

 முதலமைச்சரின் நடவடிக்கையால் புயலால் தேங்கிய மழைநீர் பல இடங்களில் துரிதமாக அகற்றப்பட்டது.சில இடங்களில் தேங்கிய மழைநீரானது அகற்றப்பட்டு வருகிறது.இதற்கு காரணம் ஒரு மாதத்திற்கு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததுதான்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி பொருத்தவரை பெரிய பாதிப்பு இல்லை. பாதிப்பு இருந்த பகுதிகள் அனைத்தும் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு சரிசெய்யபட்டுள்ளது.

மேலும் மழை செல்லும் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு அரசு அதிகாரிகள் துணை நின்றது தெரிய வந்தால் அது குறித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இதேபோல் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை உடனடியாக காலி செய்ய முடியாது என்பதால் அவர்களுக்கு உரிய இடமளித்து நீர்நிலைகள் காக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன்,மேயர் மகாலட்சுமி யுவராஜ்,ஆனையர் செந்தில் முருகன்,பகுதி செயலாளர் திலகர், மாமன்ற உறுப்பினர்கள்,அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow