திமுக தயவில் நாடாளுமன்றத்தில் நுழையும் தேமுதிக: ராஜ்யசபா எம்பி ஆகும் எல்.கே.சுதீஷ்

கட்சி தொடங்கி இதுவரை ஒரு எம்பி தேர்தலில் கூட தேமுதிக வெற்றி பெறவில்லை. இந்நிலையில்  திமுக தயவில் தேமுதிக ராஜ்யசபா எம்பியாக எல்.கே.சுதீஷ் நாடாளுமன்றத்தில் நுழைய உள்ளார். 

திமுக தயவில் நாடாளுமன்றத்தில் நுழையும் தேமுதிக: ராஜ்யசபா எம்பி ஆகும் எல்.கே.சுதீஷ்
ராஜ்யசபா எம்பி ஆகும் எல்.கே.சுதீஷ்

கடந்த 2005-ம் ஆண்டு விஜயகாந்தால் தொடங்கப்பட்ட தேமுதிக, தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து வரை உயர்ந்தாலும், நாடாளுமன்றத்தில் ஒருமுறை கூடப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றதில்லை. தற்போது திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

கட்சி தொடங்கிய அடுத்த ஆண்டே (2006) சட்டமன்றத் தேர்தலில் களம் கண்ட விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்று 8 சதவீத வாக்குகளுடன் தனது அரசியல் கணக்கைத் தொடங்கினார். பின்னர் 2009 மக்களவைத் தேர்தலில் 10 சதவீத வாக்குகளைப் பெற்று தமிழகத்தின் முக்கிய சக்தியாக உருவெடுத்தார். 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 இடங்களில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியாகவும் திகழ்ந்தது. இருப்பினும், மக்களவைத் தேர்தல்களில் அக்கட்சி தொடர் தோல்விகளையே சந்தித்து வந்தது.

தேமுதிகவின் 20 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை எட்ட முடியாத நாடாளுமன்றக் கனவு இப்போது நனவாகியுள்ளது. அக்கட்சியின் பொருளாளரும், பொதுச்செயலாளர் பிரேமலதாவின் தம்பியுமான எல்.கே. சுதீஷ், திமுக கூட்டணியின் ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் டெல்லியில் தேமுதிகவின் குரல் முதன்முறையாக ஒலிக்க உள்ளது.

முன்னதாக அதிமுக கூட்டணியில் இருந்தபோது தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் அதிருப்தியடைந்த பிரேமலதா விஜயகாந்த், அக்கூட்டணியில் இருந்து வெளியேறினார். தற்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் திமுகவுடன் கூட்டணி அமைத்து, கேட்டபடியே எம்பி பதவியைப் பெற்றுள்ளார். நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு பெரிய அரசியல் அங்கீகாரம் கிடைத்துள்ளதால் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow