ஸ்டாலின் அழைக்கிறேன்.. தொப்பி, கீ -செயின் கொடுத்து கரெக்ட் செய்ய நினைத்த பஞ்சாயத்து... கொத்தாக சிக்கிய சம்பவம்!
திமுக தலைவர் ஸ்டாலின் படம் பொறிக்கபட்ட 500 கீ செயின், 450 தொப்பி, 1,900 ஸ்டிக்கர் பறிமுதல்
தூத்துக்குடி திமுக பஞ்சாயத்து தலைவர் காரிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படம் பொறித்த கீ செயின், தொப்பி, திமுக விளம்பரம் பதாகைகள் அடங்கிய பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். காரையும் கையோடு கொண்டு சென்றனர்.
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு பணம், பொருட்களை கைப்பற்றி வருகின்றனர்.
தூத்துக்குடி 3வது மைல் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் மேகலா தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவருமான சரவணகுமாரின் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அந்த காரில் 195 திமுக விளம்பரம் பொறித்த பாக்கெட் காலண்டர் , திமுக விளம்பரம் அடங்கிய 800 கீசெயின்கள், 450 தொப்பி , 500 திமுக தலைவர் ஸ்டாலின் படம் பொறிக்கபட்ட கீ செயின், 1,900 ஸ்டிக்கர் உள்ளிட்ட பொருட்கள் காரில் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் மேகலா இது குறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கார் மற்றும் காரில் இருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். அத்துடன் காரை ஓட்டிவந்த மாப்பிளையூரணியை சேர்ந்த சுரேஸ் பிரபு என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?