மகா(ன்)பிரசாதம்: விழித்திரு வெளிச்சம் வரும்!
அதிகாலையில் எழுந்து கற்பது மனதை ஒருநிலைப்படுத்தி அறிவை வளர்க்கும். காலச் சூழல் மனதோடு தொடர்புடையது என்பதால், பிரம்ம முகூர்த்தத்தில் விழித்துப் பயின்று நம்மைப் புதுப்பித்துக்கொண்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
மகா(ன்)பிரசாதம்: விழித்திரு வெளிச்சம் வரும்.
-ஜெயாப்ரியன்
நம்முடைய சாஸ்திரங்களிலே மந்திரங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறதோ, அதே அளவுக்கு படிப்புக்கும் தரப்பட்டிருக்கிறது.
அதுவும் காலங்கார்த்தாலே எழுந்து சரஸ்வதியைக் கும்பிட்டுவிட்டுப் படிக்கவேண்டும். அப்படிச் செய்தால், மனசுக்குள்ளே பாடங்கள் நன்றாகப் பதியும் என்று சொல்லியிருக்கிறது.
நம்முடைய முன்னோர்கள் எதையும் ஒரு ரீஸன் இல்லாமல் சொல்வது இல்லை. அப்படியானால், இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், அது மனஸோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.
மனசு உள்ளே இருந்தாலும் வெளியே உள்ள சூழலுக்கு அது கட்டுப்பட்டுவிடுகிறது. அதனாலே, பளபள என்று விடியல் வெளிச்சம் பரவுவதைப் பார்க்கிறபோது, மனதுக்குள்ளே சந்தோஷம் பூக்கிறது. படிக்கிற பாடம் மனசுக்குள் நன்றாகப் பதிந்து, சரியான சமயத்தில் உபயோகமுமாகிறது.
மப்பும் மந்தாரமுமாக இருட்டு மூடிக்கொண்டு, மழைக்குத் தயாராக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது, மனசும் சோம்பலாகிவிடுகிறது.
சரி, சரஸ்வதிக்கும் இதற்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா என்றால், இருக்கிறது. சரஸ்வதி பூஜை என்று நாம் கொண்டாடக்கூடிய காலத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். கோடை, குளிர், பெரும் மழை இப்படி இல்லாமல், தட்பமும் வெப்பமும் சுகமாக இருக்கக் கூடிய பருவகாலத்தில் சரஸ்வதி பூஜை வருகிறது. அதாவது படித்து அறிவை சம்பாதித்துக் கொண்டால், சூழல் எப்படியாக இருந்தாலும் அது நமக்கு இதமாகவெ இருக்கும்.
விடியலுக்கும் முன்னாலேயான பிராம்ம முகூர்த்தத்திலே எழுந்து எழுந்து படிக்க வேண்டும் என்பது, எதோ, பள்ளிக்கூடம் போகிற குழந்தைகளுக்கு மட்டும் இல்லை. எத்தனை பெரியவர்களாகிவிட்டாலும் தினம் தினம் புதிதுபுதிதாகக் கற்றுக்கொள்ளவேண்டும். அதாவது அப்டேட் ஆனால்தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். அப்படி அப்டேட் ஆவதற்கான முயற்சிகளைச் செய்யவேண்டிய நேரமும் அதுதான்.
விழித்திரு வெளிச்சம் வரும் என்று மகான்கள் சொல்லிவைத்தது இதைத்தான்.
(பிரசாதம் மணக்கும்)
What's Your Reaction?

