தொகுதி பங்கீட்டில் திணறும் திமுக..? இடியாப்ப சிக்கலில் அண்ணா அறிவாலயம்...
வரும் மக்களவை தேர்தலில், திமுக 26 தொகுதிகள் வரை போட்டியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது
மக்களவை தேர்தலில் கொடுக்கிற தொகுதிகள் போதும் என நினைக்கும் கட்சிகளுக்கு, தொகுதிகளை ஒதுக்கிய திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி அறிவிப்பை வெளியிடாமல் இழுத்தடித்து வருகிறது.
வரும் மக்களவை தேர்தலில், திமுக 26 தொகுதிகள் வரை போட்டியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ள நிலையில், கூட்டணி கட்சிகளின் எதிர்பார்ப்பு திமுகவிற்கு பெரும் தலைவலியாக அமைந்திருக்கிறது. புதிதாக கூட்டணிக்கு வந்துள்ள மக்கள் நீதி மய்யம், மற்ற கட்சிகள் கேட்ட தொகுதிகளை கேட்பதாலேயே திமுக முடிவு எடுக்க முடியாமல் தவித்து வருகிறது.
இரட்டை இலக்க தொகுதிகளை உறுதியாக கேட்கும் காங்கிரஸுக்கு, 8 தொகுதிகள் தான் அண்ணா அறிவாலயம் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. இதனால், காங்கிரஸுடனான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. கடந்த முறை மதிமுக, திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் ஒரே தொகுதியில் போட்டியிட்டது. ஆனால், இம்முறை 3 தொகுதிகள் கேட்கும் மதிமுக தனது பம்பரம் சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ளதோடு, அதில் உறுதியாக இருக்கிறது.
வைகோ திமுகவின் உத்தரவுக்கு கீழ்பட நினைத்தாலும், அவரது மகன் துரை வைகோ சொந்த சின்னத்தில் போட்டியிடவும், தொகுதிகள் கேட்பதிலும் கெடுபிடியாகவுள்ளார். இதனால் அங்கும் இழுப்பறி கயிறு நீண்டு கொண்டே செல்கிறது.
ஆரம்பத்தில் 4 தொகுதிகள் கேட்ட விசிக, தற்போது 3ல் உறுதியாக உள்ளது. இந்த முறை ஆந்திரா, கர்நாடகா, கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களில் விசிக போட்டியிட திட்டமிட்டிருப்பதால், தங்களது சொந்த சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் வாக்கு சதவீதத்தை கொண்டு தேர்தல் ஆணையத்திடம் முறையிடவும் விசிக கணக்குப் போட்டிருப்பதால், திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இதுவரை சுமூகமாக நடக்கவில்லை.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், திமுகவிடம் இருந்து 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை எனக் கூறியிருப்பது, கூட்டணிக்குள் ஏற்பட்ட விரிசலை அப்படமாக காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அந்த சந்திப்பில், தேவைப்பட்டால், தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சரை சந்திப்பேன் என்றும் திருமாவளவன் கூறியிருக்கிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், திமுகவிடம் கூட்டணியில் இணைந்த உடனே 2 தொகுதிகள் வேண்டுமென பிடிவாதமாக உள்ளது. இதனால் கூட்டணியில் பல ஆண்டுகளாக உள்ள கட்சிகள் புருவத்தை உயர்த்தியுள்ளன. இப்படி, இடியாப்ப சிக்கல் நீடிக்கும் நிலையில், திமுக அதிக தொகுதிகளில் போட்டியிடவும், மற்ற கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்யாமல் திணறுவதும், அந்த கட்சிக்கு தேர்தலில் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?