சூரிய உதயத்திற்குத்தான் அஸ்தமனமென்றால்.. உதயம் தியேட்டருக்கும் அஸ்தமனமா? உருகிய பேரரசு..!

Feb 16, 2024 - 15:13
சூரிய உதயத்திற்குத்தான் அஸ்தமனமென்றால்.. உதயம் தியேட்டருக்கும் அஸ்தமனமா? உருகிய பேரரசு..!

சென்னையில் புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்றான உதயம் தியேட்டர் இடிக்கப்பட உள்ளது என்ற செய்தியால் தனது இதயம் இடிபட்டது, ஏதோ மனம் கனத்துப்போனது என இயக்குநர் பேரரசு உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நான் சென்னையில் முதன்முதலாக படம் பார்த்த தியேட்டர் 'உதயம்'. பார்த்த படம் ரஜினி நடித்த படிக்காதவன். அதனை தொடர்ந்து பாண்டியராஜன் நடித்த ஆண் பாவம். அதன் பிறகு உதவி இயக்குனராக பணியாற்றிய காலகட்டங்களில் நாயகன் உட்பட அதிகப்படியான படங்களை பார்த்தது உதயம் தியேட்டரில்தான். 

நான் இயக்கிய சிவகாசி, தர்மபுரி, திருவண்ணாமலை, பழனி, திருத்தணி போன்ற அனைத்து படங்களும் உதயத்தில்தான் ரிலீஸ் ஆனது. என் இதயத்தோடு சம்பந்தப்பட்டது உதயம். இன்று உதயம் தியேட்டர் இடிக்கப்பட போவதாக வந்த செய்தியால் இதயம் இடிபட்டது.ஏதோ மனம் கனத்துப் போனது. உன் வெண்திரையில் எத்தனையோ காதல் படங்கள் ஓடியிருக்கும்,

இன்று எங்கள் மனத்திரையில் நீயே காதலாய் ஓடிக்கொண்டிருக்கிறாய்... சூரிய உதயத்திற்குத்தான் அஸ்தமனமென்றால், தியேட்டர் உதயத்திற்கும் அஸ்தமனமா? சென்னை என்றதுமே ஒருசில இடங்களை வாழ்க்கையில் மறக்கவே முடியாது.அதில் முக்கியமான ஒன்று உதயம் தியேட்டர். உதயமே! உன்மீது எந்தக் கட்டிடம் வந்தாலும் எங்கள் கண்ணுக்கு நீதான் அழியாத ஓவியமாய் தெரிவாய்.. இப்படிக்கு ரசிகன் பேரரசு" என குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow