பாலாற்றில் புதிய அணை... நீதிமன்ற அவமதிப்பு - துரைமுருகன் கண்டனம்

Feb 27, 2024 - 15:50
Feb 27, 2024 - 18:36
பாலாற்றில் புதிய அணை... நீதிமன்ற அவமதிப்பு - துரைமுருகன் கண்டனம்

பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவது கூட்டாட்சிக்கு எதிரானது என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "பாலாறு ஒரு பன்மாநில நதி ஆகும். இது 1892-ம் ஆண்டில் மதராஸ் - மைசூர் ஒப்பந்தத்தின் படி, மேற்குபகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப்பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும், நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது."

"இந்த ஒப்பந்தம் படுகை சம்பந்தப்பட்ட மாநிலங்களையும் கட்டுப்படுத்தும். மேலும் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் என 16.02.2018 அன்று காவிரி சம்பந்தப்பட்ட பிரச்னையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில் தன்னிச்சையாக ஒரு புதிய ஆந்திர அரசு அணையை கட்ட முயற்சிப்பது 1892-ம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறும் செயல்" என அமைச்சர் துரைமுருகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கிடையே ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே அமைக்கப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்திருப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் சிவில் வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வாறு 2 அசல் வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, தன்னிச்சையாக ஆந்திர அரசு பாலாற்றில் ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பதும், அதற்காக அதனுடைய நிதிநிலை அறிக்கையில் பணம் ஒதுக்கியிருப்பதும் முற்றிலும் உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகத்தான் கருத வேண்டும். இச்செயல் இருமாநிலங்களின் நட்புக்கு ஏற்றதல்ல, கூட்டாட்சிக்கு எதிரானது.. ஆகையால் ஆந்திர அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இம்மாதிரியான எந்த வித செயல்களையும் மேற்கொள்ள கூடாது என இருமாநிலங்களின் நலன் கருதி கேட்டுக் கொள்வதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow