குடிநீர் பிரச்சினை.. ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டையை ஒப்படைப்போம்.. கொந்தளிக்கும் கிருஷ்ணகிரி
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காததால் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மூங்கிலேரி கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மூங்கிலேரி மற்றும் புளியம்பட்டி கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு நீரின்றி அவதிப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த ஊர்களை சுற்றியுள்ள 33 கிராம ஏரிகளையும் பாரூர் பெரிய ஏரியின் கிழக்கு கால்வாய் திட்டத்தின் மூலமாக இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் மூங்கிலேரியில் உள்ள பெரிய ஏரி, புளியம்பட்டியில் உள்ள நாகன்குட்டை ஏரி ஆகியவற்றை மட்டும் இணைக்காததால் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த 2 ஏரிகளையும் இத்திட்டத்தில் இணைப்பதற்கு அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளதாக அதிகாரிகள் அரசுக்கு ஆவணங்களை சமர்ப்பித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் தனிப்பிரிவு என பலமுறை மனு அளித்தும் தங்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்பது கிராம மக்களின் புகார்.
இதனால் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ள கிராம மக்கள், இது தொடர்பாக தங்களது வீடுகளில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
இத்தகைய போராட்டங்களுக்கு பிறகும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?