தாத்தாவுக்கு ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன் சொன்ன பேத்தி! பாராட்டி உச்சிமுகர்ந்த இயக்குநர் இமயம்...

Feb 27, 2024 - 15:55
Feb 27, 2024 - 16:07
தாத்தாவுக்கு ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன் சொன்ன பேத்தி! பாராட்டி உச்சிமுகர்ந்த இயக்குநர் இமயம்...
பேத்தி மதிவதனியுடன் இயக்குநர் பாரதிராஜா

தனது 14 வயது பேத்தி மதிவதனி இயக்கியுள்ள குறும்படத்தில் நடித்துள்ள இயக்குநர் பாரதிராஜா, அவருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் தமக்கெனத் தனி முத்திரை பதித்த இயக்குநர் பாரதிராஜா. கதை, கரு என்று பேசுபொருள் ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் திரையுலகின் முன்னோடியாகத் திகழ்பவர். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, நிழல்கள், முதல் மரியாதை என்று இவரது வெற்றிப் படங்களின் பட்டியல்கள் நீளும். தமது தாஜ்மஹால் திரைப்படம் மூலம் மகன் மனோஜ் பாரதிராஜாவையும் இவர் அறிமுகப்படுத்தினார். பின்னர் சில படங்களில் அவர் நடித்துவருகிறார்.

இந்நிலையில் திரைப்படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு, முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பாரதிராஜா நடித்து வருகிறார். இந்நிலையில், அண்மையில் பாரதிராஜாவை வைத்து மார்கழித் திங்கள் என்ற திரைப்படத்தை மனோஜ் பாரதிராஜா இயக்கினார். இந்தத் திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. இப்படி அடுத்தடுத்த இயக்குநர்கள் ஒரே குடும்பத்தில் உருவாகி வரும் நிலையில், அடுத்த வாரிசாக மனோஜ் பாரதிராஜாவின் மகள் மதிவதனியும் இயக்குநராகியுள்ளார்.

மனோஜ் பாரதிராஜாவின் மகளான மதிவதனி, தாம் பயிலும் பள்ளிக்காக குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். அதில், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், குறும்படத்தை திறமையாக இயக்கியதாக தனது பேத்தியைப் பாரதிராஜா பாராட்டியுள்ளார். அவரது அலுவலகத்தில் மதிவதனிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்த பாரதிராஜா, நெகிழ்ச்சியுடன் உச்சி முகர்ந்து பாராட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow