அங்கித் திவாரியை விசாரிக்க விரும்பவில்லை : விலகிய நீதிபதி!! காரணம் என்ன?...
மத்திய அரசின் அதிகாரி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு.
லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் கோரிய வழக்கில் இருந்து விலகுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் சுரேஷ்பாபுவை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தப்ப வைக்க
ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை துணை இயக்குநர் அங்கித் திவாரி கடந்தாண்டு டிசம்பர் 1-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், அங்கித் திவாரி ஜாமீன் கோரிய மனுக்களை திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் இரு முறையும், உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒரு முறையும் தள்ளுபடி செய்தன. இந்த நிலையில் 2-வது முறையாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி அங்கித் திவாரி மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி விவேக்குமார் சிங் முன் இன்று ( மார்ச் 12) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கு நீர்த்து போய்விடும் என வாதிட்டார். தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் ஜாமீனுக்கான நிபந்தனை குறித்தும் வாதிட்டார். அப்போது கோபமடைந்த நீதிபதி விவேக்குமார் சிங், அங்கித் திவாரி ஜாமீன் கோரிய மனுவை நான் விசாரிக்க விரும்பவில்லை. இந்த வழக்கில் இருந்து விலகி கொள்கிறேன் என தெரிவித்தார். மத்திய அரசின் அதிகாரி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்து வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?