போதைப்பொருள் கடத்தல் வழக்கு : ஜாபர் சாதிக்கிற்கு பரிசு - டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்
ஜாபர் சாதிக் வழங்கிய சிசிடிவி கேமராக்களை நிறுத்தி விட்டோம் - சங்கர் ஜிவால்
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலான நிலையில் அதுகுறித்து டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்..
டெல்லியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு போதைப் பொருள் தடுப்பு போலீசார் நடத்திய சோதனையில் போதைப் பொருள் தயாரிக்கப் பயன்படும் ரூ.2,000 கோடி மதிப்பிலான 50 கிலோ ரசாயனப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை கைது செய்த நிலையில் அவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், இந்த கடத்தல் பின்னணியில், தமிழ் சினிமா திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் ஆகியோர் மூளையாக செயல்பட்டதும் அம்பலமானது.
இதையடுத்து தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், அவருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் விருது வழங்கிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜாபர் சாதிக்குடன் இருக்கும் புகைப்படம் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஜாபர் சாதிக்கிற்கு தான் கொடுத்தது விருது அல்ல, வெறும் பரிசுப்பொருள் என கூறியுள்ளார். மேலும், சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தபோது 10 சிசிடிவவி கேமராக்களை ஜாபர் சாதிக் வழங்கினார் எனவும் போதைப்பொருள் வழக்கில் குற்றவாளி என தெரிந்ததும் அவர் வழங்கிய சிசிடிவி கேமராக்களை நிறுத்தி விட்டோம் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
What's Your Reaction?