எழும்பூர் புறநகர் ரயில் சேவை மேலும் குறைப்பு: 5-வது நாளாக பயணிகள் கடும் அவதி

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக 204-ஆக இருந்த ரயில் சேவைகள் 164-ஆக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது 115-ஆக மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 5-வது நாளாக பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். 

எழும்பூர் புறநகர் ரயில் சேவை மேலும் குறைப்பு: 5-வது நாளாக பயணிகள் கடும் அவதி
எழும்பூர் புறநகர் ரயில் சேவை மேலும் குறைப்பு

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11-வது நடைமேடைகளை விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படும் எனத் தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த வழித்தடத்தில் வழக்கமாக இரு மார்க்கங்களிலும் 204 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. பராமரிப்புப் பணிகள் தொடங்கியபோது இது 164 சேவைகளாகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில், தெற்கு ரயில்வே நேற்று (23.02.2026) இரவு வெளியிட்டுள்ள திடீர் அறிவிப்பில், ரயில் சேவைகள் மேலும் குறைக்கப்பட்டு தற்போது 115 ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையான முன்னறிவிப்பு இன்றி ரயில் சேவைகள் அதிரடியாகக் குறைக்கப்பட்டதால், இன்று காலை பணிக்குச் செல்லும் ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ரயில் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. இயக்கப்படும் குறைவான ரயில்களிலும் கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

பராமரிப்புப் பணிகளை விரைந்து முடித்து, மீண்டும் முழுமையான அளவில் ரயில்களை இயக்க வேண்டும் என்றும், ரத்து செய்யப்படும் ரயில்கள் குறித்த தகவல்களை அனைத்து நிலையங்களிலும் தெளிவாக அறிவிக்க வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow