"தமிழ்நாடு தலைகுனியாது” தலைப்பில் தேர்தல் பரப்புரை: பிப்ரவரி 1 முதல் தொடக்கம்: திமுக அறிவிப்பு
தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் தேர்தல் பரப்புரை திமுக தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் திமுக அரசு தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகிறது. இதன் ஒருகட்டமாக சட்டமன்ற தேர்தல் பரப்புரை பிப்ரவரி 1-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இந்த பரப்புரையில் 20 நட்சத்திர பேச்சாளர்கள், 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்வார்கள்; ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒவ்வொரு பொதுக்கூட்டம் நடத்த பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்த்தியுள்ளார். பரப்புரையை வெற்றியடையச் செய்ய மண்டலப் பொறுப்பாளர்கள், மா.செக்கள் ஏற்பாடுகள் செய்திட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: மு.க. ஸ்டாலின் தலைமையில் 20.01.2026 நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், "தமிழ்நாடு தலைகுனியாது என்ற பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.
இந்த பரப்புரையின் கீழ், ஸ்டாலினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நட்சத்திரப் பரப்புரையாளர்கள், தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், பிப்ரவரி மாதம் முழுவதும் தீவிரமான பரப்புரை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள்.இந்த பரப்புரையின் போது, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும், ஒரு பொதுக் கூட்டம் நடத்திட வேண்டும்.
மேலும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள் / மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோரை ஒரே இடத்தில் அழைத்து, மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் / பொறுப்பாளர்கள் மற்றும் நட்சத்திரப் பரப்புரையாளர்கள் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறியும், கலந்துகொள்வோரின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு தலைகுனியாது" பரப்புரையை வெற்றியடையச் செய்திடும் வகையில் பரப்புரை குறித்து தக்க விளம்பரங்களைச் செய்திடவும், தொகுதிகளில் தேவையான ஏற்பாடுகளைச் செய்திடவும் மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் / பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?

