அல்லிநகரம் ஆணையருக்கு தலைவலி..! போர்க்கொடி தூக்கிய உறுப்பினர்கள்..! போஸ்டரை கவனிச்சீங்களா?
தேனி மாவட்டத்திலுள்ள அல்லிநகரம் நகராட்சி 33 வார்டு உறுப்பினர்களை கொண்டது. இதில் திமுகவை சேர்ந்த ரேணுகா பாலமுருகன் நகராட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். நகராட்சி ஆணையராக ஜஹாங்கிர் பாஷா உள்ளார். கடந்த 13ஆம் தேதி ஜஹாங்கிர் பாஷா தலைமையில், தேனி நகர் மன்ற கூட்டம் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.
இதில் 88 தீர்மானங்கள் கொண்டு வந்து விவாதிக்கப்பட்டது. ஆனால் அதில் பாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தீர்மானங்களை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். நகர் மன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புகளை மீறி ஒரு தலைப்பட்சமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகபும் குற்றச்சாட்டு உறுப்பினர்களாலேயே முன்வைக்கப்படுகிறது.
இதனால் திமுக உறுப்பினர் செல்வம் மற்றும் நகராட்சி ஆணையர் ஜஹாங்கிர் பாஷா இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திமுக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் என 14 பேர் வெளிநடப்பு செய்தனர். தீர்மானங்களுக்கு வாக்கு எண்ணிக்கை நடத்திய ஆணையர், போதிய ஆதரவு இருப்பதாக கூறிய நிலையில், ஆணையர் சரிவர வாக்கு எண்ணிக்கை நடத்தவில்லை எனவும், மீண்டும் நடத்த வேண்டும் எனவும் கூறி துணைத் தலைவர் மற்றும் எதிர்ப்பு கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை நடத்திய ஆணையர், எதிர்ப்புக்கு போதிய ஆதரவு இல்லாததால் ஒத்திவைப்பு தீர்மானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். நகர்மன்ற துணைத் தலைவர் உள்ளிட்ட எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்கள், ஆணையர் மற்றும் நகர்மன்றத் தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும், தீர்மானம் நிறைவேற்ற போதிய ஆதரவு இருப்பதாகக் கூறி அனைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, கூட்டம் பாதியில் முடிக்கப்பட்டுள்ளது.
ஆணையரின் நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த திமுக, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட 14 பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நீதிமன்றம் சென்று சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறிவிட்டு கலைந்து சென்றனர். இந்த நிலையில், தேனி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா உறுப்பினர்களை ஒருமையில் பேசுவதாகக் கூறி, அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நகரின் பல பகுதிகளில் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் உறுப்பினர்கள் - ஆணையர் மோதல் அல்லிநகரம் பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.
What's Your Reaction?