பெண் போலீஸிடம் தகராறு... கைது செய்யப்பட்ட இந்து முன்னணி நிர்வாகி.. ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!
உள்ளாடைகளை கழட்டி காட்டி பெண் போலீசாரிடம் தகராறு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் குபேந்திரனுக்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 6ம் தேதி தஞ்சாவூர் ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் ஒரு பெண் போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநரான ரவி என்பவரை பெண் போலீஸ் தட்டிக் கேட்க, போக முடியாது எனக்கூறி ரவி பிரச்னையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரம் பார்த்து அங்கு சென்ற இந்து முன்னணி மாவட்ட செயலாளர் குபேந்திரன், பெண் போலீசை ஆபாச வார்த்தைகளால் வசைபாடியதோடு, தனது உள்ளாடைகளை அவிழித்து தகராறு செய்ததாகவும் தெரிகிறது. தொடர்ந்து தனது ஆதரவாளர்களை திரட்டி அங்கு சாலைமறியலில் ஈடுபட்டுள்ளார் குபேந்திரன். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சாவூர் போலீசார் குபேந்திரன் உட்பட மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், சிறையில் இருந்த மூன்று பேரும் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் குபேந்திரன் தவிர்த்து மற்ற இருவருக்கும் ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் ஜாமின் கோரி குபேந்திரன் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நம்பிசெல்வன், காவல்துறைக்கு எதிராக மிகப்பெரிய குற்றச் செயலில் ஈடுபட்டதாகக் கூறி குபேந்திரனுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அப்போது குபேந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எதிர்காலத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு எந்த அவமரியாதை செய்யும் விதத்தில் நடக்க மாட்டேன் என மனுதாரர் உறுதிமொழிப் பத்திரத்தை தாக்கல் செய்திருப்பதால், ஜாமின் வழங்க வேண்டும் என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் உட்பட பல நிபந்தனைகளை விதித்து ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
What's Your Reaction?