தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் சூறாவளி சுற்றுப்பயணம்

அதிகாரிகள் முறைப்படி மழை குறித்து எச்சரிக்கை செய்யவில்லை என மக்கள் குற்றச்சாட்டு

Dec 27, 2023 - 12:35
Dec 27, 2023 - 17:10
தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் சூறாவளி சுற்றுப்பயணம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் சூறாவளி சுற்றுப்பயணம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒரே நாளில் 120 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதியில் பெய்த கன மழையால் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்து இருக்கிறது தூத்துக்குடி மாவட்டம். ஒரு லட்சம் கடைகள் மழை தண்ணீரில் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவிக்கிறார்கள். விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உப்புகள் மழை தண்ணீரில் கரைந்து விட்டதாக உப்பு உற்பத்தியாளர்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதி பொருள் மற்றும் மரத்தடி யார்டு, கண்டெய்னர் யார்டு  மழைநீரால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஏற்றுமதி இறக்குமதி நிறுவன உரிமையாளர்கள் சொல்கிறார்கள்.

இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட தூத்துக்குடி வந்தார். விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மழை வெள்ள சேத புகைப்படங்களை பார்வையிட்டார். தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அவருக்கு படங்களை காட்டி விளக்கினார். அதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் எம்.பி கனிமொழி, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, நெல்லை பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நஷ்ட விவரங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு 70 பக்க அறிக்கையாக மத்திய நிதி அமைச்சரிடம் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாளிகையில் நடந்த கூட்டத்தில் உப்பு உற்பத்தியாளர் சங்கம், விவசாயிகள் சங்கம் சிறுகுறு தொழிற்சங்கம், ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் சங்கம் உட்பட12 தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டு நிதி அமைச்சரிடம் மனுக்களை கொடுத்தனர்.அதைத் தொடர்ந்து மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்றார் நிதி அமைச்சர். அவருடன் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிகாரிகள், பாஜக பிரமுகர்கள் சென்றார்கள். அந்தோணியார்புரம், கோரம்பள்ளம் குளம், குறிஞ்சி நகர், ஸ்ரீவைகுண்டம், முறப்பநாடு, கோவில்பத்து, ஏரல், ராஜபதி பாலவெல்லாம் ஆகிய ஊருக்கு சென்று வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டார். அப்போது அங்கு கூடியிருந்த மக்களிடம் குறைகளை கேட்டார்.

கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டதை பார்வையிட்ட போது அங்கு கூடிய விவசாயிகள் "இந்த குளம் ஐந்து கிலோ மீட்டர் நீளமும் மூன்று கிலோ மீட்டர் அகலமும் கொண்டதாகும். ஆனால் இதுவரை முறைப்படி தூர்வரப்படவில்லை. மேலும் மழை தண்ணீர் வேகமாக வந்து கொண்டு குளம் நிறைந்த நிலையில் மதகுகளை திறக்கவில்லை. அதனாலையே குளம் உடைந்து அனைத்து தண்ணீரும் வீணாகி விட்டது" என்று சொன்னார்கள்.

ஏரலில் மத்திய நிதி அமைச்சரிடம் எங்களுக்கு "அதிகாரிகள் முறைப்படி மழை குறித்து எச்சரிக்கை செய்யவில்லை. முறையான தகவல் கிடைத்திருந்தால் எங்கள் பொருட்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் நாங்கள் நஷ்டம் அடைந்திருக்க மாட்டோம்" என்றார்கள். பொதுமக்களிடம் கனிவாக குறைகளை கேட்ட நிதியமைச்சர் உங்கள் குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ச்சியாக  ஆய்வு பணிகளை மேற்கொண்டார் நிதி அமைச்சர். கிட்டத்தட்ட தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 120 கிலோமீட்டர் காரில் பயணம் செய்து இந்த பணியை செய்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்து நிமிடத்தில் ஆய்வு பணியை முடித்து சென்று விட்ட நிலையில் நிதியமைச்சரின் இந்த ஆய்வு மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.


-எஸ்.அண்ணாதுரை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow