கொலை வழக்கில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து

சாட்சியங்களில் இருந்து குற்றத்துக்கு முழுமையான ஆதாரம் இல்லை என்றும், குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க காவல்துறை தவறிவிட்டது

Dec 27, 2023 - 12:23
Dec 27, 2023 - 16:43
கொலை வழக்கில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து

கொலை வழக்கில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டம், தென்குமரை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவருக்கும், மல்லிகேஸ்வரி என்பவருக்கும், பொதுவான கிணற்றிலிருந்து சொட்டு நீர் பாசனத்துக்கு தண்ணீர் எடுப்பதில் தகராறு இருந்து வந்துள்ளது.

2015ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி இரவு,  மல்லிகேஸ்வரி, அவரது மகன் செந்தில்குமார், மகள் சத்தியவாணி, மருமகன் யுவராஜ், சம்பந்திகள் மாணிக்கம், தங்கம், மருமகள் கோமதி ஆகியோர் மண்வெட்டி, இரும்புக்கம்பி, கட்டை ஆகியவற்றுடன் வெங்கடாசலத்தின் நிலத்திற்குள் நுழைந்து, சொட்டு நீர்ப்பாசன குழாய்களை உடைத்ததாகக் கூறப்படுகிறது.

சத்தம்கேட்டு வந்த வெங்கடாசலமும், அவரது மனைவி பரமேஸ்வரியும் தட்டிகேட்டபோது, வெங்கடாசலத்தை மண்வெட்டியால் தலையில் அடித்து, இரும்பு கம்பியால் தாக்கி, சத்தம்போடாமல் இருப்பதற்காக வாயில் துணியை அடைத்து கிணற்றில் தள்ளியுள்ளதாகக் கூறப்படுகிறது.சத்தம் கேட்டு ஊர் பொதுமக்கள் கூடிய நிலையில், மல்லிகேஸ்வரி குடும்பத்தார் தப்பி ஓடிய நிலையில், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் வெங்கடாசலத்தின் உடல் கிணற்றிலிருந்து  மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக, தலைவாசல் காவல் நிலையத்தினர் பதிவுசெய்த கொலை வழக்கை விசாரித்த சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றம், ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து ஏழு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்குகளை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன், காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ கோகுலகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.இருவரது வாதங்களுக்கு பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஏற்கனவே வெங்கடாசலம் தாக்கப்பட்டதாக அவரது மனைவி சாட்சியம் அளித்தாலும், புகார் அளிக்காத நிலையில், முன்விரோதம் இருந்தது என்பதை காவல்துறை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டது. 

கிணத்தில் உடல் கிடப்பதாக கூறிதான் தீயணைப்பு துறையையும், காவல்துறையையும் அழைத்துள்ளதாகவும், கொலை என சொல்லவில்லை என்றும், முறையாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.கொலை செய்யப்பட்ட வெங்கடாசலத்தின் மனைவியின் சாட்சியம் நேரடியாக பார்த்ததாக இல்லை எனவும், தலையில் மண்வெட்டியால் அடித்த காயங்களுக்கான தடயங்களோ?ரத்தக்கறையோ? இல்லை எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.சாட்சியங்களில் இருந்து குற்றத்துக்கு முழுமையான ஆதாரம் இல்லை என்றும், குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க காவல்துறை தவறிவிட்டது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், சேலம் அமர்வு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை ரத்து செய்து, 7 பேரையும் விடுதலை செய்து  தீர்ப்பளித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow