சீல் வைத்து எடுத்துச்செல்லப்பட்ட EVM இயந்திரங்கள்.. ! இனி அனைத்தும் துணை ராணுவம் கையில்...
தமிழகம் முழுவதும் நடந்த மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும்பாலுமான இடங்களில் நிறைவடைந்த நிலையில், அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் உள்ள EVM இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டன.
முன்னதாக விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, கடந்த மக்களவை தேர்தலை விட இம்முறை கூடுதல் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். அதன்படி, கடந்த 2019 ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில், 69 சதவீத வாக்குகளும், தற்போதைய தேர்தலில் 72.09 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
எனினும், வேங்கைவயல், விழுப்புரம், கோவை உள்ளிட்ட இடங்களில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவிருப்பதால், முழுமையான விவரங்களை நாளை (ஏப்ரல் 20) நண்பகல் தெரிவிப்பதாக அவர் கூறினார்.
இதனிடையே, சரியாக மாலை 6 மணிக்கு நிறைவடையவிருந்த வாக்குப்பதிவு சில காரணங்களுக்காக சில இடங்களில் சற்று தாமதமானது. ஏனெனில் கடைசி நேரத்தில் சில பூத்களில், பொதுமக்கள் வாக்குப்பதிவு செய்ய வந்தனர். அதனால் அவர்களுக்கு டோக்கன் முறையில் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. 6 மணிக்கு மேல் வந்தவர்களுக்கு வாக்குப்பதிவு நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
அதன்பின் வாக்குச்சாவடிகளில் போலீசார், தேர்தல் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் EVM இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, முன்னரே பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட இடங்களுக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாகனங்களில் எடுத்துச்செல்லப்பட்டன.
பெரும்பாலும், தேர்தெடுக்கப்பட்ட கல்லூரி வளாகங்களில் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜூன் 3ஆம் தேதி வரை வைக்கப்படவுள்ளன. இவை துணை ராணுவத்தின் கண்காணிப்பின் கீழ் இருக்கும். அதன்பின்னர் ஜூன் 4ஆம் தேதி வாக்குகளை எண்ணும் மையங்களுக்கு கொண்டுச்செல்லப்பட்டு வாக்குகள் எண்ணப்படும்.
What's Your Reaction?