சிறுவாபுரி முருகனை சரணமடைந்த ஜி.கே வாசன்.. பூரி சுட்டு வாக்கு சேகரிப்பு.. டக்கென்று மாறிய சீன்
மக்களவை தேர்தலுக்காக பிஸியாக வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள் பூரி, பஜ்ஜி சுட்டு வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர். சிறுவாபுரி முருகன் கோவிலில் வாக்கு சேகரித்த ஜி.கே. வாசன், பையில் இருந்து எடுத்து கொடுத்த பணம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சி வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து விட்டு பிரச்சாரத்திற்கு கிளம்பி விட்டனர். பாஜகவிற்காக கூட்டணியில் உள்ள ஜி.கே. வாசன் பிரச்சாரம் செய்து வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு செவ்வாய்கிழமையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். பங்குனி மாதம் என்பதால் தினம் தினம் மக்கள் கூட்டம்தான். இந்த கோவிலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், திருவள்ளூர் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதியுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன் முருகனை தரிசனம் செய்துள்ளதாகவும், முருகன் பெயரில் கணபதிக்கு வாக்கு சேகரிப்பது விசேஷமான ஒன்று.
மோடி ஆட்சியின் 10ஆண்டு தொடர் சாதனையே வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என்றார். பாஜக வேட்பாளரின் வெற்றி தொகுதி மக்களின் வெற்றி என தெரிவித்தார். பாஜகவில் இணைபவர்களிடம் மட்டுமே மோடி பேசுவதாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜி.கே.வாசன் மேடையில் இருக்கும் எங்களுக்கு தெரியாதது, பத்திரிக்கையாளர்களுக்கு தெரிகிறதா?.
பிரதமர் மோடியை பொறுத்தவரை தமிழ், தமிழ்நாடு, கலாச்சாரம், பண்பாடு, தமிழ் மொழி ஆகியவற்றை மிகவும் நேசிப்பவர். செங்கோலை வரலாற்று பிரபலத்தை ஏற்படுத்தியவர். எதிர் கட்சியினர் தோற்பது உறுதி என்பதால் மோடி பற்றி அவதூறு பேசுகின்றனர். அனைத்து கூட்டணி கட்சி தலைவர்கள் பெயரையும் சொல்லி அழைப்பது அவரின் அன்பை காட்டுகிறது. தேவையில்லாத பேச்சுக்களை பேசி வாக்குவங்கிக்காக மக்களை ஏமாற்ற நினைத்தால் திமுகவை இனியும் மக்கள் நம்ப தயாராக இல்லை என்றும் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேருந்தில் பயணித்த ஜி.கே. வாசன், பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பயணிகளிடம் வாக்கு சேகரித்தார். அங்கிருந்த டிபன் கடைக்கு சென்ற ஜி.கே.வாசன் பூரி சுட்டு கடை உரிமையாளரிடம் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அங்கிருந்த மாலை கடைக்காரர் ஒருவர் வாசனுக்கு மாலை அணிவித்த போது தன்னுடைய உதவியாளரை அழைத்து அவரிடம் இருந்து பணம் வாங்கி கடைக்காரருக்கு கொடுத்தார்.
அப்போது செய்தியாளர்கள் இருந்ததைப் பார்த்த ஜி.கே வாசன், உடனே பதறிப்போய், மாலைக்காக கொடுத்த பணம் அதனை கொச்சைபடுத்திவிடாதீர்கள் என விளக்கம் கொடுத்து விட்டு தொடர்ந்து பாஜக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். அப்போது கட்சி நிர்வாகிகள் சிலர் அவரிடம் மனு அளித்தனர். ஆரணி பேரூராட்சியில் டாஸ்மாக் கடையை அகற்றிட வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல உள்ளது என குற்றம் சாட்டினார்.
இதுதான் தமிழ்நாடு அரசின் மக்கள் பணி என்றார். இந்த பகுதியில் எங்கள் வேட்பாளர் வெற்றி பெற்றால் என கூறிய அவர் டக்கென்று பேச்சை மாற்றி, வெற்றி பெறுவது உறுதி என்றும் அதற்கு பிறகு பொதுமக்களை திரட்டி இந்த டாஸ்மாக் கடையை மூடுவது முதல் பணி என உறுதி அளித்தார்.
What's Your Reaction?