"SC, ST, OBC இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து... மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங். திட்டம்" - பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு...
பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை
மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர்,
"நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி வசூலிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. நாட்டு மக்களின் சொத்துகளை பறிக்க காங்கிரஸ் திட்டம் தீட்டியுள்ளது. நாட்டில் உள்ள ஏழை மக்களின் சொத்துகள், உடைமைகள் மீது காங்கிரஸ் கட்சி கண் வைத்துள்ளது. மக்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்து, பணத்தை பறிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது” என குற்றம்சாட்டினார்.
மேலும், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் SC, ST, OBC இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து ஏற்படும். நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறித்து, அதை முஸ்லீம்களுக்கு கொடுப்பதற்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும், பாஜக ஆட்சிக்கு வந்தால் மதரீதியிலான இடஒதுக்கீட்டை அனுமதிக்காது எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸின் மோசமான நிர்வாகம் மற்றும் அலட்சியமே நாட்டின் அழிவுக்குக் காரணம். இன்று, பயங்கரவாதம் மற்றும் நக்சலிசத்திற்கு எதிராக பாஜக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வன்முறையை பரப்புபவர்களை காங்கிரஸ் ஆதரித்து, அவர்களை துணிச்சலானவர்கள் என்று அழைக்கிறது. தீவிரவாதிகள் கொல்லப்படும்போது, இந்த காங்கிரஸின் மிகப்பெரிய தலைவர் கண்ணீர் விடுகிறார். இதுபோன்ற செயல்களால், நாட்டு மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் இழந்துள்ளது.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளிவந்தபோது, அதில், முஸ்லிம் லீக்கின் முத்திரை இருந்தது என்று அன்றே கூறியிருந்தேன். அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, இந்தியாவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது என்று பாபா சாகேப் அம்பேத்கர் தலைமையில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், வாக்கு வங்கிக்காக காங்கிரஸுக்கு இந்த மாமனிதர்களின் வார்த்தைகள் மீது அக்கறை இல்லை. ஆந்திராவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க பல ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸ் முயற்சி செய்தது. பின்னர் நாடு முழுவதும் செயல்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டது.
அரச குடும்ப இளவரசரின் ஆலோசகரும், அரச குடும்பத்தின் இளவரசரின் தந்தையின் ஆலோசகரும் நடுத்தர வர்க்கத்தினர் மீது அதிக வரி விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இப்போது, இவர்கள், அதைவிட ஒருபடி மேலே சென்றுவிட்டார்கள், காங்கிரஸ் வாரிசு வரி விதிக்கப் போவதாகச் சொல்கிறது, மேலும், பெற்றோரிடமிருந்து பெற்ற பரம்பரை சொத்துக்கும் வரி விதிக்கப் போகிறது. உங்கள் கடின உழைப்பால் நீங்கள் சேர்த்த சொத்து உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கப்படாது.
அதையும் காங்கிரஸின் நகங்கள் உங்களிடமிருந்து பறித்துவிடும். நீங்கள் உயிருடன் இருக்கும் வரை காங்கிரஸ் அதிக வரிகளை விதிக்கும், நீங்கள் உயிருடன் இல்லாதபோது அது உங்கள் பரம்பரைக்கு வரியை சுமத்திவிடும்" என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
What's Your Reaction?