ஆளுக்கு ஏற்ற மாதிரி மாறும் விதிமுறை... பாரபட்சம் காட்டும் தேர்தல் அதிகாரிகள்.. வேட்பாளர்கள் குமுறல்
தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நடுநிலையாக செயல்படுவதில்லை என குற்றச்சாட்டு
தஞ்சையில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய செல்லும் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கு ஏற்றார் போல் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை விதிமுறைகளை மாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தஞ்சை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தனர். முன்னதாக வேட்பு மனுத்தாக்கல் செய்ய சென்ற ஒவ்வொரு வேட்பாளர்களுக்கு ஏற்றார் போல் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை விதிமுறைகளை தளர்த்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பங்குனி உத்திரம் நாளான திங்கட்கிழமையன்று அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சிவநேசன் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றுள்ளார். அப்போது அவரது வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டு, கட்சி துண்டை அணியக்கூடாது என்றும், 5 பேர் மட்டுமே மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் செல்ல காவல்துறை அனுமதியளித்ததாக தெரிகிறது.
இந்நிலையில் இன்று புதன்கிழமை தஞ்சை திமுக வேட்பாளர் முரசொலி வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் மூன்று கார்களில் 15க்கும் மேற்பட்டோர் கட்சி துண்டுடன் சென்றதாகவும், ஆனால் அவர்களை காவல்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நடுநிலையாக செயல்படாமல் வேட்பாளர்களுக்கு ஏற்றார் போல் தேர்தல் விதிமுறைகளை தளர்த்தியது தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மீது மற்ற வேட்பாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?