முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா... மீண்டும் மாலை பதவியேற்பா? என்ன நடக்கிறது ஹரியானாவில்?
ஹரியானாவில் ஆளும் பாஜக - ஜே.ஜே.பி இடையேயான கூட்டணியில் ஏற்பட்ட விரிசலை அடுத்து அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் பதவியை ராஜினாமா செய்தார்.
ஹரியானாவில் பாஜக - துஷ்யந்த சத்துலாவின் ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் உள்ளது. மாநில முதலமைச்சராக மனோகர் லால் கட்டாரும், துணை முதலமைச்சராக துஷ்யந்த் சத்துலாவும் உள்ளனர். இந்நிலையில் இரு கட்சிகளுக்கும் இடையே, வரும் மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மொத்தம் உள்ள 10 மக்களவைத் தொகுகளில் பாஜக, கூட்டணிக் கட்சியான ஜே.ஜே.பி-க்கு 1 தொகுதி ஒதுக்கியதாகத் தெரிகிறது. இதனை அக்கட்சி ஏற்காததோடு 2 தொகுதிகள் கேட்டதாகவும் கூறப்படுகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் 370 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என திட்டமிட்டுள்ள பாஜக, அதற்கு மறுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் அம்மாநில மனோகர் லால் கட்டார் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவரது அமைச்சரவையும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தது. மொத்தமுள்ள 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 40 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸுக்கு 31 உறுப்பினர்களும், ஜேஜேபி கட்சிக்கு 10 உறுப்பினர்களும் உள்ளனர். 7 உறுப்பினர்கள் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றுள்ளனர். ஆட்சியமைக்க 46 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், ஜேஜேபி மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் ஆதரவுடன் மனோகர் லால் கட்டார் ஆட்சியமைத்தார்.
இந்த சூழலில் துஷ்யந்த் சத்துலாவின் ஜேஜேபி-யை கழட்டிவிட்டுள்ளது. இதனையடுத்து, 40 பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் 7 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் மீண்டும் மனோகர் லால் கட்டார் இன்று பிற்பகல் பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், மனோகர் லால் கட்டார் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் சில கருத்துக்கள் கூறப்படுகிறது. இதனால், ஹரியானா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
What's Your Reaction?