தமிழ்நாட்டின் 3 மாவட்டங்களில் கன மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களில கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது செப்டம்பர் மாதம்தானா இல்லை மே மாதம் மப்டியில் வந்திருக்கிறதா என்று மீம் போடும் அளவுக்கு வெயில் கொளுத்தி வந்த நிலையில் கடந்த மூன்று நாள்களாக சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இரவு நேரங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. வெயிலின் உக்கிர தாண்டவத்தால் தத்தளித்த மக்களுக்கு மழை பெறும் ஆறுதலாய் இருக்கிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் மழை நிலவரத்தை வெளியிட்டிருக்கிறது.
‘மேற்குத் திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக, செப்டம்பர் 21ம் தேதியான இன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.
நாளை செப்டம்பர் 22ம் தேதி முதல் 27ம் தேதி வரைக்கும் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 - 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகர்ப்புறப் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28 செல்சியஸ் அளவிலும் இருக்க வாய்ப்புள்ளது.’ என்று கூறியிருக்கிறது. மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கையாக ‘இன்று மன்னார் வளைகுடா, தென்தமிழகக் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இன்று முழுவதும் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
What's Your Reaction?