”திருமா-க்கு சட்டம் தெரியல… Classஐ கட் அடித்துவிட்டார் போல..” – அஸ்வத்தாமன் காட்டம்!

திருமாவளவனுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் தெரியவில்லை என்று கூறி பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் அஸ்வத்தாமன் விமர்சித்துள்ளார்.  

Sep 21, 2024 - 15:56
”திருமா-க்கு சட்டம் தெரியல… Classஐ கட் அடித்துவிட்டார் போல..” – அஸ்வத்தாமன் காட்டம்!

திருப்பதி தேவஸ்தானம் லட்டு பிரசாத கலப்படம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக கூறி பியூஸ் மனுஷ் என்கிற நபர் மீது சென்னை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார் பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் அஸ்வத்தாமன். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், திருமாவளவனை காட்டமாக விமர்சித்து பேசி இருந்தார். 

அப்போது, “திருமாவளவன் மதுவிலக்கு மாநாடு நடத்துவதாக கூறி மதுவிலக்கை மத்திய அரசிடம் வலியுறுத்துவதாக கூறுவது கேலிக்குரியது. மது மற்றும் மதுவிலக்கு ஆகியவை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பட்டியலில் எட்டாவது இடத்தில் வருகிறது. திருமாவளவன் சட்டம் படித்தவர் தான். ஆனாலும் இந்த விஷயம் அவருக்கு தெரியவில்லை மாநிலப் பட்டியலில் வருகிற ஒரு விஷயத்திற்கு மத்திய அரசு எப்படி சட்டம் இயற்ற முடியும்? நான் படித்த  சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் தான் அவரும் படித்தார். எனக்கு அவர் சூப்பர் சீனியர். ஆனாலும் எப்படி சட்டம் தெரியாமல் இருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. 

கான்ஸ்டிடியூஷன் கிளாஸ் நடக்கும்போது கட் அடித்துவிட்டார் போல. திருமாவளவன் நடத்துவது “போலி மது ஒழிப்பு மாநாடு,  பாரதிய ஜனதா கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் உண்மையாக மது ஒழிப்புக்கு போராடிக் கொண்டிருக்கிற கட்சிகள். ஆகவே இந்த இரண்டு கட்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுக்க வில்லை” என்று அஸ்வத்தாமன் கூறினார்.

தொடர்ந்து பேசிய அஸ்வத்தாமன், ”பசு பாதுகாப்பு என்பது நமது வராலற்றில் உள்ள விஷயம். திருவள்ளுவரே பசு பாதுகாப்பு பற்றி பேசியுள்ளார். சோழர் கால கல்வெட்டுகள் பசுவை கொல்வது பெரிய பாவம் என்கிறது. அதன் அடிப்படையில் பெரும்பான்மை மக்கள் பசுவை தெய்வமாக வணங்குகின்றனர். அந்த நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதும், இந்துக்கள் மனதை புண்படுத்துவதும் சட்டப்படி குற்றம். 1857 ல் நடந்த சிப்பாய் கலகம் மாட்டுக்கொழுப்பும் பன்றிக் கொழுப்பும் கலந்த துப்பாக்கி தோட்டாவினுடைய உரையை சிப்பாய்கள் கடித்து நீக்க வேண்டி இருந்ததாலும், அதற்கு வெள்ளையர்கள் வற்புறுத்தியதாலும் தான் நடந்தது. மாடுகொழுப்பை எதிர்த்து இந்துக்களும் பன்றிக்கொழுப்பை எதிர்த்து இஸ்லாமியர்களும் போராடினார்கள். ஏற்கனவே இந்துக்கள் பலரும் திருப்பதி தேவஸ்தான லட்டு பிரசாத விவகாரத்தில் கலக்கமடைந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் வன்மத்தோடு பேசியுள்ள பீயூஸ் மனுஸ் போன்றவர்கள் தண்டிக்கப்படவேண்டும்” என்று வலியுறுத்தினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow