ரூ. 4 கோடி பணம்.. நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கையா?.. சத்யபிரதா சாகு சொல்வதென்ன?

ரூ.4 கோடி பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்று தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

May 7, 2024 - 16:10
ரூ. 4 கோடி பணம்.. நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கையா?.. சத்யபிரதா சாகு சொல்வதென்ன?

திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பெருமாள்பட்டு தனியார் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு நேரில் ஆய்வு செய்தார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆய்வில் திருவள்ளூர் ஆட்சியர் பிரபுசங்கர், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆவடி காவல் ஆணையர் சங்கர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் ஆகியோருடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதா சாகு, வாக்கு எண்ணிக்கை மையத்தில் எந்த வித பாதுகாப்புக் குறைபாடும் கண்டறியப்படவில்லை அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது எனக் கூறினார். 

நீலகிரி தொகுதியில் கண்காணிப்பு கேமரா வேலை செய்யாதது குறித்த கேள்விக்கு, ஓவர் லோடு காரணமாகவே கண்காணிப்பு கேமராவில் சற்று நேரம் பழுது ஏற்பட்டதாகவும் பின்னர் அது சரி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள இடங்களில் ஓவர் லோடு ஆகாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பணியமர்த்தப்பட்டுள்ள தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வெயிலின் தாக்கத்தினால் உடல் சோர்வு ஏற்படாமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பான பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் குறித்த கேள்விக்கு, பதிலளித்த சத்யபிரதா சாகு, தேர்தல் ஆணையமே நடவடிக்கையை முடிவுசெய்யும் எனக்கூறினார். 

தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் செலவின பார்வையாளர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே நயினார் நாகேந்திரன் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow