தண்டுவடத்தில் உடைந்த மயக்க ஊசி.. செயலிழந்த உடல் உறுப்பு.. நிர்கதியாய் நிற்கும் பெண்...

Apr 29, 2024 - 22:32
Apr 29, 2024 - 22:46
தண்டுவடத்தில் உடைந்த மயக்க ஊசி.. செயலிழந்த உடல் உறுப்பு.. நிர்கதியாய் நிற்கும் பெண்...

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தனது கணவருக்கு இடுப்பிற்கு கீழே உள்ள உடல் உறுப்புகள் செயல்படவில்லை எனக் கூறி  மனநலம் குன்றிய மகனுடன் பெண் ஒருவர் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.

திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கந்தன் குமார் – சாவித்ரி தம்பதி. இவர்களுக்கு நவீன்குமார் மற்றும் புவனேஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் நவீன்குமார் மனநலம் குன்றியவர் எனக் கூறப்படுகிறது. கூலி வேலை செய்து வந்த கந்தன்குமார், கிடைக்கும் வருமானத்தில் நவீன்குமாரின் மருத்துவ சிகிச்சையையும் குடும்ப தேவைகளையும் கவனித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், கந்தன்குமார் திடீரென தீராத வயிற்றுவலி காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த மார்ச் 10-ம் தேதி அவர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவரது வயிற்றில் கட்டி இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

அதன்படி மார்ச் 23-ம் தேதி கந்தன் குமாருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, முதுகு தண்டுவடத்தில் செலுத்தப்பட்ட மயக்க ஊசி உடைந்து உள்ளேயே சிக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவனையில் கந்தன்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அறுவை சிகிச்சை மூலம் மூலம் முதுகு தண்டுவடத்தில் இருந்த ஊசி அகற்றப்பட்டது. 

இந்த நிலையில், கந்தன்குமாரின் இடுப்புக்குக் கீழே உள்ள உடல் உறுப்புகள் திடீரென செயல் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது. மருத்துவர்களின் அலட்சிப்போக்கால் வயிற்று வலிக்காக சென்றவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் இடுப்புக்குக் கீழே செயல்பாடு இல்லை என  உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இந்த விவகாரம் தொடர்பாக சாவித்ரி தனது மகன்களுடன் சென்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அப்போது பேட்டியளித்த சாவித்ரி, தனது கணவர் எழுந்த நடக்க முடியாததால் தங்களது வாழ்வாதாரமே கேள்விக்குறி ஆகியுள்ளதாக கண்ணீருடன் கூறியுள்ளார்.

எனவே, அலட்சியமாக செயல்பட்ட திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையெனில் தனது மகன்களுடன் இங்கேயே உயிரை விட்டுவிடுவோம் என  சாவித்ரி வேதனை பொங்க தெரிவித்துள்ளார்.

மேலும், கந்தன்குமாரின் இளைய மகன் புவனேஷ்குமார் பேசும்போது, எங்க அப்பாவ எப்படியாவது நடக்க வைக்கணும்.. பழைய மாதிரி எங்க அப்பா எனக்கு வேணும் என கண்ணீருடன் கூறியது காண்பவர்களின் மனதை உலுக்கும் வகையில் உள்ளது. 

அரசு மருத்துவர்களின் அலட்சிப்போக்கால் ஒரு குடும்பமே வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow