ஆற்று மணல் விற்பனை.. அரசின் விதிகள் பின்பற்றப்படுகிறதா?.. மதுரை ஹைகோர்ட் கேள்வி

Apr 26, 2024 - 19:01
ஆற்று மணல் விற்பனை.. அரசின் விதிகள் பின்பற்றப்படுகிறதா?..  மதுரை ஹைகோர்ட் கேள்வி

ஆற்று மணல் விற்பனையில் தமிழ்நாடு அரசின் விதிகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

சேலம் கிழக்கு மாவட்டம் மணல் மற்றும் எம் சாண்ட் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கார்த்திக் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில், "தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்காக பயன்படுத்தப்படும் மணலை தமிழ்நாடு அரசு சார்பாக கிடங்குகளை அமைத்து அரசு இணையதளத்தில் பதிவு செய்த பின்னரே விற்கப்படுகிறது. இதில், பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் பதிவு செய்கின்றனர். ஆனால் அரசு நிர்ணயித்துள்ள விலையை விட அரசு அதிகாரிகள் மற்றும் தனிநபர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டு அளவுக்கு அதிகமாக விலையை நிர்ணயித்து மணலை விற்பனை செய்கின்றனர். 

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை விதிகளை பின்பற்றாமல் அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், "பொதுமக்களின் பெயரில் அரசு இணையதளத்தில் பதிவு செய்து அரசு அதிகாரிகளே போலியான வாகன எண்ணைப் பயன்படுத்தி மணலை கள்ளச்சந்தையில் விற்கின்றனர். 

எனவே இதுபோன்ற செயலில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு நேரடியாக ஆற்று மணலை விற்க அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அமர்வில் இன்று (ஏப்ரல் 26) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசாணை  விதிகளின்படி மணல் விற்பனை நடக்கிறதா?  என்பது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow