பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்கு.. தேர்தல் நடத்தை விதியை மீறியதாக குற்றச்சாட்டு...
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பெங்களூர் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளரும் சிட்டிங் எம்.பியுமான தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 19-ம் தேதி முதற்கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து இன்று இரண்டாம் கட்டமாக கேரளா, கர்நாடகா உட்பட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. கர்நாடகா மாநிலத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் பெங்களூர் தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் சிட்டிங் எம்.பி தேஜஸ்வி சூர்யா மற்றும் காங்கிரஸ் சார்பில் செளமியா ரெட்டி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பி.கே.ஹரிபிரசாத்தை 3.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தேஜஸ்வி சூர்யா வெற்றி பெற்றார். பாஜகவின் கோட்டையாக பெங்களூரு தெற்கு தொகுதி திகழும் நிலையில், மீண்டும் அங்கு வெற்றியைக் கைப்பற்ற பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாஜகவுக்கு வாக்கு சேகரிப்பது தொடர்பாக மத ரீதியிலான கருத்துகளை அவர் தெரிவித்ததாக ஜெயநகர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர் தெற்கு தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், பாஜக வேட்பாளரும் சிட்டிங் எம்.பியுமான தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?