டாஸ்மாக் காலி மது பாட்டில்கள்.. கணக்கு சரியில்லையே.. புது அறிக்கை கொடுங்க.. ஹைகோர்ட் உத்தரவு
டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் மூலம் ஈட்டிய தொகை தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வழங்கிய அறிக்கை ஏற்றுக்கொள்ளும்படி இல்லாததால் புதிய அறிக்கையை தாக்கல் செய்ய டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வனம், வன விலங்குகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது.
தமிழ்நாட்டில், மலை பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மதுபாட்டில்களை கூடுதலாக ரூ.10-க்கு விற்பனை செய்து, காலி மதுபாட்டில்களை திருப்பி தரும் போது, அந்த கூடுதலாக வசூலித்த ரூ.10-யை திருப்பிக் கொடுக்கும், காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று இந்த சிறப்பு அமர்வு அதிரடியாக உத்தரவிட்டிருந்தது.
இந்த திட்டம் ஊட்டி, கொடைக்கானல், மேகமலை உள்ளிட்ட மலை பகுதிகளில் கடந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டன. அதன்பின்னர், 12 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காலி மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டம் குறித்து டாஸ்மாக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில்,
ஊட்டி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மதுபாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்தது மூலம், 306 கோடியே 32 லட்சத்து 25 ஆயிரத்து 330 ரூபாய் வசூலிக்கப்பட்டது என்றும், காலி மதுபாட்டில்களை திருப்பிக் கொடுத்தவர்களுக்கு 297 கோடியே 12 லட்சத்து 61 ஆயிரத்து 280 ரூபாய் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 கோடியே 19 லட்சத்து 64 ஆயிரத்து 50 ரூபாய் தனி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, கடந்த ஜனவரி மாதம் திருவாரூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திலும் சுமார் 2 கோடி ரூபாய் தனி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் காலி பாட்டிகள் திரும்ப பெறும் திட்டத்தில் சுமார் 12 கோடியே 62 லட்சம் ரூபாய் தனிக்கணக்கில் வைக்கப்பட்டுள்ளதென கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தொகை விவரங்கள் ஏற்றுக் கொள்ளும் விதமாக இல்லை என்று கூறினர். அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், இந்த தொகையை சரி பார்த்து மீண்டும் புதிய அறிக்கையை தாக்கல் செய்வதாக கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தெளிவான அறிக்கையை அளிக்குமாறு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
What's Your Reaction?