அரசு நிலத்தையா ஆக்கிரமிக்குறீங்க..? இடித்துத் தள்ளிய அதிகாரிகள்! கதறி அழுத பெண்கள்...
நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்ற வந்ததை எதிர்த்து, பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த தகரக் கொட்டகையை நீதிமன்ற உத்தரவுப்படி வருமான வரித்துறையினர் அகற்றவந்தபோது பெண்கள் தீக்குளிக்க முயன்று, தர்ணா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கமுதியை அடுத்த வல்லந்தை ஊராட்சிக்கு உட்பட்ட கீழநரியன் கிராமத்தில் முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.49.56 லட்சம் மதிப்பீட்டில் சாலை போடும் பணி தொடங்கப்பட்டது. சுமார் 800 மீட்டருக்கு சாலை அமைக்கும் பணி கடந்த ஜூலை மாதத்திலிருந்து நடந்துவந்த நிலையில், தெருவின் முடிவுப் பகுதியில், சுமார் 11 ச.மீட்டர் பரப்பளவில், சிலர் தகர கொட்டகை அமைத்து, சாலைப் பணிகளை மேற்கொள்ளவிடாமல் தடுத்து வந்தனர். இதனால் சாலை போடும் பணி நிறுத்தப்பட்டது. மேலும், ஜல்லி கற்கள் சாலையெங்கும் பரவிக் கிடந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், அதே கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற தீர்ப்பளித்தது. அதன்பேரில் கமுதி காவல் ஆய்வாளர் தலைமையில் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர். அப்போது, ஆக்கிரமிப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், மண்ணெண்ணய்யை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான நிலையில், தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அவர்களை அப்புறப்படுத்தினர். அதன் பின்னர், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சாலை போடும் பணி தொடங்கப்பட்டது. இதில் 8 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
What's Your Reaction?