போலீஸ் ஸ்டேஷனாக மாற போகும் ஹிட்லர் பிறந்த வீடு: மக்கள் அமோக வரவேற்பு
ஆஸ்திரியாவின் பிரவுனாவு அன் இன் என்ற சிறிய நகரத்தில் இருக்கும் சர்வாதிகாரி ஹிட்லரின் வீட்டை காவல் நிலையமாக மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளது.
ஜெர்மனி நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ள பிரானாவ் அம் இன் (Braunau am Inn) என்ற ஊரில், சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லர் பிறந்த வீடு உள்ளது. நீண்ட நாட்களாகப் பாழடைந்து கிடக்கும் இந்தக் கட்டிடத்தைக் காவல் நிலையமாக மாற்ற ஆஸ்திரிய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த இடம் நாஜி ஆதரவாளர்கள் மற்றும் தீவிர வலதுசாரி அமைப்பினர் கூடும் இடமாக மாறிவிடக் கூடாது என்பதே அரசின் முக்கிய நோக்கம். 2016-ஆம் ஆண்டில் ஒரு சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வந்த ஆஸ்திரிய அரசு, தனியார் வசம் இருந்த இந்தக் கட்டிடத்தைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இந்த இடத்தை ஒரு காவல் நிலையமாக மாற்றுவதன் மூலம் அதன் பழைய அடையாளத்தை "நடுநிலையாக்க" (Neutralise) முடியும் என்று அரசு நம்புகிறது.
இந்த முடிவைச் சிலர் வரவேற்றாலும், சிலர் விமர்சித்துள்ளனர். "இது ஒரு இருதலைக் கொள்ளி எறும்பு போன்றது" என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். காவல் நிலையமாக மாற்றுவதால் தேவையற்ற நபர்கள் அங்கு கூடுவது தடுக்கப்படும் என்றாலும், இந்த இடத்தை இன்னும் சிறந்த முறையில் (அருங்காட்சியகம் போன்ற) பயன்படுத்தியிருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.
ஹிட்லர் ஏப்ரல் 20, 1889 அன்று இந்த வீட்டில் பிறந்தார். அவர் அங்கு மிகக் குறுகிய காலமே வசித்திருந்தாலும், இன்றும் உலகம் முழுவதிலுமிருந்து நாஜி ஆதரவாளர்கள் அங்கு வந்து செல்கின்றனர். இந்த வீட்டின் முன்னே வைக்கப்பட்டுள்ள நினைவுச் கல்லில், "அமைதி, சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக... மீண்டும் ஒருமுறை பாசிசம் வேண்டாம்... லட்சக்கணக்கான உயிர்களின் மரணம் நம்மை எச்சரிக்கிறது" என்று எழுதப்பட்டுள்ளது.
What's Your Reaction?

