தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு இத்தனை கோடி சரக்கு விற்பனையா?டாஸ்மாக் நிர்வாகம் அப்டேட்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூ. 518 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுபான விற்பனை தமிழகத்தில் அரசே டாஸ்மாக் நிர்வாகம் மூலம் செய்து வருகிறது. இந்த வகையில் தமிழகம் முழுவதும் 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் சில்லறை விற்பனையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தினந்தோறும் சராசரியாக ரூ.150 கோடி வரை விற்பனை இருக்கும். விடுமுறை தினம் மற்றும் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக ரூ.170 முதல் ரூ.180 கோடி வரை விற்பனையாகும். அதுவே, பண்டிகை காலங்களில் விற்பனை இன்னும் அதிகமாக இருக்கும்.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ரூ.789.85 கோடி அளவிற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. தற்போது பொங்கல் விடுமுறையை முன்னிட்டு குடிமகன்கள் அதிகளவில் மதுபானங்களை வாங்கியதால் விற்பனை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.
போகி பண்டிகை (ஜனவரி 14): தமிழகம் முழுவதும் ரூ. 217 கோடிக்கு மது விற்பனையானது. தைப்பொங்கல் (ஜனவரி 15): பண்டிகை தினத்தன்று விற்பனை இன்னும் அதிகரித்து, ஒரே நாளில் ரூ. 301 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. ஆக மொத்தம் இரண்டு தினங்களில் ரூ.518 கோடி அளவிற்கு மதுபானம் விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
What's Your Reaction?

