அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலம்:  சீறிய காளைகள் பாய்ந்து அடக்கிய வீரர்கள் 

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் சீறி சென்ற காளைகள் பாய்ந்து சென்று மாடுபிடி வீரர்கள் அடக்கிய காட்சிகள் பார்வையாளர்களை நெகிழ்ச்சி அடைய செய்த்தது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலம்:  சீறிய காளைகள் பாய்ந்து அடக்கிய வீரர்கள் 
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலம்

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கியது. அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்க்கப்பட்டு வருகின்றன.

இந்தக் களத்தில் மொத்தம் 1000 காளைகளும், 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு சுற்றிலும் தலா 50 வீரர்கள் வீதம் சீருடை அணிந்து காளைகளை அடக்கக் களமிறக்கப்படுகின்றனர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளைத் திமிலைப் பிடித்து அடக்க வீரர்கள் மல்லுக்கட்டி வருவது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

போட்டியில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களுக்குத் தங்கக் காசு, பீரோ, கட்டில் மற்றும் வெள்ளிப் பொருட்கள் எனப் பரிசுகள் வாரி வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கு காரும், சிறந்த காளைக்கு டிராக்டரும் மெகா பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிக்காகத் தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி மேற்பார்வையில் 3,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், காயமடைபவர்களுக்குச் சிகிச்சை அளிக்க 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் முதலுதவி மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

தற்போது நடைபெற்று வரும் போட்டியின் மூன்றாம் சுற்று முடிவில், மொத்தம் 251 காளைகள் அவிழ்க்கப்பட்டுள்ளன. அதில் 39 காளைகள் வீரர்களால் பிடிபட்டுள்ளன. இதுவரை 9 வீரர்கள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.தற்போதைய நிலவரப்படி, பூவந்தியைச் சேர்ந்த அபிசித்தர் 7 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து சொட்டதட்டியைச் சேர்ந்த சுந்தர் 6 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார். அகத்தியன் மற்றும் பெரியகங்கை ஆகியோர் தலா 3 காளைகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மூன்றாம் சுற்றில் சுந்தர், பெரியகங்கை மற்றும் லெட்சுமணன் ஆகியோர் தகுதி பெற்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow