சேரிமொழி பேச்சுக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன்- குஷ்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புகார் அளிக்கட்டும். நான் பார்க்காத வழக்குகளா என தெரிவித்தார். 

Nov 25, 2023 - 13:05
Nov 25, 2023 - 18:26
சேரிமொழி  பேச்சுக்காக  மன்னிப்பு கேட்க மாட்டேன்-  குஷ்பு

சேரி மொழி என்ற கருத்திற்கு நான் எப்போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என  நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சு தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒருவருக்கு பதிலளித்த குஷ்பு, திமுக குண்டர்கள் இப்படியான மோசமான மொழியைத் தான் பயன்படுத்துவார்கள்.அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது இதுதான்.

சாரி, என்னால் உங்களைப் போல சேரி மொழியில் பேச முடியாது. ஆனால் என்ன நடந்தது, என்ன பேசினார்கள், என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கண்விழித்து பாருங்கள். திமுக உங்களுக்கு சட்டங்களை கற்றுத்தரவில்லை என்றால், நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருப்பது வெட்கக்கேடானது என பதிவிட்டிருந்தார். இதில் உங்களை போல சேரி மொழியில் பேச முடியாது என குஷ்பு பயன்படுத்திய வார்த்தைக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்தது.

இதைத்தொடர்ந்து நடிகை குஷ்பு இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்.இல்லையென்றால் அவரது வீடு முற்றுகையிடப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி பிரிவினர் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, குஷ்பு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் குஷ்பு மீது எஸ்.சி, எஸ்.சி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “சேரி என பதிவிட்டது பதிவிட்டதுதான். பயந்து பதிவை நீக்குவது பின்வாங்குவதெல்லாம் கிடையாது.வேளச்சேரி, செம்மஞ்சேரி என இருப்பதைப் போல் சேரி எனக்கூறினேன்.அதில் தவறில்லை. ஊர் பெயர்களிலேயே சேரி என இருக்கும்போது நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், எல்லா மக்களும் சமம்தான். நான் எந்த மக்களையும் குறிப்பிட்டு கூறவில்லை. சேரி மொழி என்ற கருத்திற்காக நான் எப்போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்.எனக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் போராட்டம் நடத்தட்டும்.குடியரசுத் தலைவரை தகாத வார்த்தைகளால் காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்தனர்.

மணிப்பூர் மாநிலத்தில் நடந்த சம்பவம் தொடர்பாகவும், நான் கண்டக்குரல் கொடுத்தேன்.மணிப்பூர் விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என எப்படி சொல்வீர்கள். மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புகார் அளிக்கட்டும்.நான் பார்க்காத வழக்குகளா என தெரிவித்தார். 

நடிகை திரிஷாவிடம் இருந்து புகார் வந்ததால்தான் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் பெரிதாக்கப்பட்டுள்ளது.ஆந்திராவில் அமைச்சர் ரோஜா விவகாரத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow